ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி காலம் வருகிற ஜூலை மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க 17-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீராகுமாரும் போட்டியிடுகிறார்கள்.
இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரியின் பதவி காலம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ந்தேதி முடிவடைகிறது. இதனால் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி டெல்லியில் இன்று வெளியிட்டார்.
அதன்படி துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.
இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற ஜூலை 4-ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் தேர்தல் தொடர்பான அறிவிக்கை வெளியிடப்படும்.
ஜூலை 18-ந்தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள். மனுக்கள் பரிசீலனை 19-ந்தேதி தொடங்குகிறது. வாபஸ் பெற ஜூலை 21-ந்தேதி கடைசி நாள். அன்றைய தினம் போட்டியில் இருக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
போட்டி இருந்தால் ஆகஸ்ட் 5-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டு விடும்.
ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்ற மக்களவை மற்றும் மேல்சபை எம்.பி.க்களுடன் மாநில சட்டசபை எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப்போடுவார்கள்.
துணை ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்ற மக்களவை மற்றும் மேல்-சபை எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிப்பார்கள்.
பாராளுமன்றத்தின் இரு சபைகளின் மொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 790 ஆக உள்ளது.
இதில் மக்களவையில் பா.ஜனதா பலம் 280 ஆக உள்ளது. இதுதவிர அதன் கூட்டணி கட்சிகளான சிவசேனா (18), தெலுங்கு தேசம் (16), தெலுங்கானா கட்சி (11), பிஜூ ஜனதா தளம் (20), லோக்ஜனசக்தி (6), அகாலிதளம் (4) போன்ற கட்சிகளின் ஆதரவும் உள்ளது. இதுதவிர அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்கள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் 9 எம்.பி.க்கள் ஆதரவும் பா.ஜனதாவுக்கு கிடைக்கும்.
மேல்-சபையில் காங்கிரஸ் முதலிடத்தில் உள்ளது. அங்கு அதன் எம்.பி.க்கள் பலம் 58 ஆக உள்ளது. பா.ஜனதா 56 எம்.பி.க்களுடன் 2-வது இடத்தில் உள்ளது.
அ.தி.மு.க.வுக்கு 13 எம்.பி.க்களும், பிஜூ ஜனதா தளத்துக்கு 8 எம்.பி.க்களும், தெலுங்கு தேசம் கட்சிக்கு 6, சிவசேனாவுக்கு 3, தெலுங்கானா கட்சிக்கு 3, அகாலி தளம் கட்சிக்கு 3 எம்.பி.க்களும் உள்ளனர்.
எனவே இருசபை எம்.பி.க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பா.ஜனதாவுக்கே கூடுதல் எம்.பி.க்கள் பலம் உள்ளது. எனவே ஜனாதிபதி தேர்தலைப் போலவே துணை ஜனாதிபதி தேர்தலிலும் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
துணை ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் தேர்வில் பா.ஜனதா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. துணை ஜனாதிபதி பதவிக்கு பா.ஜனதாவே வேட்பாளரை நிறுத்துமா? அல்லது கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுக்குமா? என்ற எதிர் பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு சுமித்ரா மகாஜனை நிறுத்திய பா.ஜனதா கட்சி, துணை சபாநாயகர் பதவியை பாராளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாக விளங்கும் அ.தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுத்தது.
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்தி இருப்பது போல் துணை ஜனாதிபதி தேர்தலிலும் வேட்பாளரை நிறுத்துமா? அல்லது வெற்றி வாய்ப்பு இல்லாததால் போட்டியில் இருந்து ஒதுங்கி கொள்ளுமா? என்று தெரியவில்லை.