செய்திகள்

துணை ஜனாதிபதி தேர்தல்: பா.ஜனதா வேட்பாளர் வெங்கையாநாயுடு?

துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தேர்வாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் முடிவதைத் தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தற்போது நடந்து வருகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான 18 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்க முன்னாள் கவர்னரும் மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ணகாந்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் நாளை மனு தாக்கல் செய்ய உள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரிக்கும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்திக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவரை எதிர்த்து களம் இறங்கப் போகும் பா.ஜனதா கட்சி வேட்பாளர் யார் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஜனாதிபதி பதவிக்கு வட மாநிலத்தைச் சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டு விட்டதால், துணை ஜனாதிபதி பதவிக்கு தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களில் யாராவது ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் விரும்புகிறார்கள். இதையடுத்து பசவராஜ் பட்டீல், ஓ.ராஜகோபால் உள்பட பலரது பெயர்கள் துணை ஜனாதிபதி பதவிக்கு அடிபட்டன.

இந்த நிலையில் மத்திய மந்திரி வெங்கையாநாயுடு துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்வாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை அவரை பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தொடர்பு கொண்டு இது குறித்து பேசினார்.

அப்போது வெங்கையா நாயுடு, தீவிர அரசியலில் தொடர்ந்து நீடிக்கவே விரும்புகிறேன் என்று கூறியதாக தெரிகிறது. மேலும் அவர் “உஷாபதியாகவே இருக்க விரும்புகிறேன். (உஷா என்பது அவர் மனைவி) உப பதியாக மாற விரும்பவில்லை” என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

என்றாலும் மேல்-சபையை திறம்பட நடத்த அனுபவம் உள்ளவர் தேவை என்பதால் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் துணை ஜனாதிபதி பதவிக்கு வெங்கையா நாயுடு பெயரை பரிந்துரைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்ததும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற பா.ஜ.க. குழு தலைவர்களுடன் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் ஆலோசனை நடத்த உள்ளனர். அதன்பிறகு மாலை 6 மணிக்கு டெல்லியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் பா.ஜ.க. தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

அந்த கூட்டத்தில் துணை ஜனாதிபதியாக யாரை தேர்ந்து எடுக்கலாம் என்பது முடிவு செய்யப்படும். அருண்ஜெட்லி, துணை ஜனாதிபதி பெயரை பரிந்துரை செய்வார்.

அதன் பிறகு இன்றிரவே பா.ஜ.க. துணை ஜனாதிபதி வேட்பாளர் பெயர் விவரம் அறிவிக்கப்படும். நாளை அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளும் இன்றிரவே தொடங்கும்.

வெங்கையா நாயுடு பிடிவாதமாக மறுக்கும் பட்சத்தில் துணை ஜனாதிபதியாக போகும் அதிர்ஷ்டசாலி, யாரும் எதிர்பாராத நபராக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் டி.எச்.சங்கரமூர்த்தி என்பவரின் பெயரும் அடிபடுகிறது.

கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் 1940-ம் ஆண்டு நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவராவார். ஆர்.எஸ்.எஸ்.சில் சேவையாற்றிய இவர் பிறகு தன்னை பா.ஜனதாவில் இணைத்துக் கொண்டார்.

1988-ம் ஆண்டு முதல் இவர் கர்நாடகா மேல்-சபையில் உறுப்பினராக இருந்து வருகிறார். கட்சி மாறுபாடின்றிஅனைவரிடமும் பழகும் இயல்பு கொண்ட சங்கரமூர்த்தி 2010-ம் ஆண்டு முதல் கர்நாடகா மேல்-சபை தலைவராக இருந்து வரு கிறார்.