செய்திகள்

உயர்கல்வித்துறையில் தவறுகளை தடுக்க துணைவேந்தர்கள் தலைமையில் குழு - உயர்கல்வித்துறை செயலாளர்

உயர்கல்வித்துறையில் தவறுகளை தடுக்க துணைவேந்தர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாக உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால் கூறினார்.

மாலை மலர்

வடவள்ளி:

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் தர வரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் பாரதியார் பல்கலைக்கழகம் 13-வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் சிறந்து விளங்குகிறது. அதிலும் பாரதியார் பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலகத்தில் உள்ள 100 என்ஜினீயரிங் கல்லூரியில் தமிழகத்தில் 19 என்ஜினீயரிங் கல்லூரிகள் சிறந்து விளங்குகிறது.

நிர்மலா தேவி விவகாரம் குறித்து கடந்த வாரம் தான் எங்களுக்கு புகார் வந்தது. உடனே அதனை காவல்துறை விசாரிக்க உத்தரவிட்டோம். இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளப்படும். இச்சம்பவம் மிகப்பெரிய தவறு. இதில் யார் சம்பந்தப்பட்டாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

உயர்கல்வித்துறையில் சில தவறுகள் இருப்பது உண்மை தான். அது சரி செய்யப்படும். தொடர்ந்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வரும் புகார்கள் குறித்தும், இனி இதுபோன்ற சம்பவங்கள் வராமல் இருக்கவும் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் திறந்த வெளி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தலைமையில் பேராசிரியர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழு அளிக்கும் அறிக்கையின் பரிந்துரைகள் தமிழகத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் அமல்படுத்தப்படும்.

அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இனி ஆன்லைனில் விண்ணப்பங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் நேர்மையாக நடந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.