செய்திகள்

லஞ்ச வழக்கில் கைதான துணைவேந்தர் கணபதி ஜாமீன் மனு தள்ளுபடி

லஞ்ச வாங்கியதாக கைது செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜான்மினோ உத்தரவிட்டார்.

மாலை மலர்

கோவை:

உதவி பேராசியர் பணி நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கடந்த 3-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

அவருடன் பேராசிரியர் தர்மராஜூம் கைதானார். கடந்த 2016-ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட 80 பேராசிரியர் பணியிடங்களில் பலரிடம் ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை லஞ்சம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் பேராசிரியர் அல்லாத பணியிடங்களை நியமித்ததில் லஞ்சம், விடைத்தாள்களை தயாரித்து வழங்கியதில் லஞ்சம், மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கியதாக போலி பில்கள் தயாரித்து லஞ்சம் என துணைவேந்தர் கணபதி மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக துணைவேந்தர் கணபதியை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார், கோவை ஊழல் தடுப்பு சட்ட வழக்குகள் சிறப்பு கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவுக்கு நாளை பதில் அளிப்பதாக துணைவேந்தர் தரப்பு வக்கீல் ஞான பாரதி கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகிய இருவரும் தங்களை ஜாமீனில் விடுவிக்ககோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் சிவக்குமார் ஆஜராகி வாதாடினார்.

துணைவேந்தர் கணபதியின் தூண்டுதலின்பேரில் பேராசிரியர் தர்மராஜ் ரூ. 30 லட்சம் லஞ்சம் கேட்டு உதவி பேராசிரியர் சுரேஷிடம் பேசி இருக்கிறார். இதையடுத்து அவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்ததின் அடிப்படையில் போலீசார் துணைவேந்தரை கையும், களவுமாக கைது செய்துள்ளனர். இதன் மூலம் துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் லஞ்சம் வாங்கியது நிரூபணமாகி உள்ளது. எனவே இருவரையும் ஜாமீனில் விடுவிக்க கூடாது என கூறினார். இதையடுத்து கணபதி, தர்மராஜ் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜான்மினோ உத்தரவிட்டார்.

துணைவேந்தர் கணபதி தரப்பு வக்கீல் ஞானபாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த வழக்கு திட்டமிட்ட சதி. இந்த வழக்கில் நேரடியாக துணைவேந்தருக்கு எந்த தொடர்பும் இல்லை. எனவே இதே கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மீண்டும் மனு தாக்கல் செய்வோம்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரு நாள் முழுவதும் துணைவேந்தரை கஸ்டடியில் வைத்திருந்தனர். அப்போது காசோலைகளை பறிமுதல் செய்யவில்லை. எனவே காவலில் எடுத்து விசாரிக்கும் போது போலீசாரே காசோலைகளை வைத்து விட்டு பறிமுதல் செய்ததாக சொல்வதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே எங்களது பதிலை நாளை கோர்ட்டில் தெரிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews