துணைவேந்தர் கணபதி 
செய்திகள்

தற்காலிக  ஊழியர்களிடம் ரூ.3  கோடி லஞ்சம்: துணைவேந்தர் கணபதி மீது மேலும் ஒரு புகார்

லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள துணைவேந்தர் கணபதி தற்காலிக ஊழியர்களிடம் ரூ.3 கோடி லஞ்சம் வாங்கியது தற்போது அம்பலமாகி உள்ளது.

மாலை மலர்

கோவை:

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி வரும் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

துணைவேந்தர் கணபதி 2016-ம் ஆண்டு 76 பேராசிரியர் பணியிடங்களை நிரப்பினார். இவற்றுக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை லஞ்சம் பெற்றுள்ளதாக புகார் கூறப்பட்டது. மேலும் ஊழியர்கள், அலுவலர்கள், டிரைவர்கள் என 250 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது. இவற்றில் பணியிடத்துக்கு தகுந்தாற்போல் லஞ்சம் பெற்றுள்ளனர்.

இதுதவிர கடந்த 10 ஆண்டுகளாக பல்கலைக்கழக அலுவலகங்களில் தற்காலிகமாக பணியாற்றி வரும் ஊழியர்கள் 120 பேரை பணி நிரந்தரம் செய்வதாக கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை லஞ்சமாக பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் மொத்தத்தில் ரூ.3 கோடி ஊழல் நடந்திருக்கலாம் என தெரிகிறது. இதற்கு கேன்டீன் ஊழியர், அலுவலர்கள், பேராசிரியர்கள் என பலரும் இடைத்தரகர்களாக செயல்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் கணபதி மீது அடுக்கடுக்கான புகார்கள் பல்கலைக்கழகத்தில் புதியதாக எந்த பணியிடத்தையும் நிரப்பக் கூடாது என உயர் கல்வித்துறையில் இருந்து உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனால் பணம் பெற்ற தற்காலிக ஊழியர்களிடம் உங்களை முதற்கட்டமாக தொகுப்பூதிய ஊழியர்களாக மாற்றுகிறோம், விரைவில் பணி நிரந்தரம் செய்து விடுவோம் என கூறி சமாளித்துள்ளனர். ஆனால் தற்போது வரை அவர்கள் தற்காலிக பணியாளர்களாகவே பணியாற்றி வருகின்றனர்.

கணபதி கைதாகி உள்ள நிலையில் பணிநிரந்தரத்துக்கு பணம் கொடுத்த ஊழியர்கள் பரிதவித்த வண்ணம் உள்ளனர். மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்களிடம் விசாரணை நடத்துவார்களோ? என்ற அச்சமும் அவர்களிடம் உள்ளது.

இதற்கிடையே, பேராசிரியர் பணிநியமனங்களில் நடந்த முறைகேடு தொடர்பாக ஏராளமான ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். அதில் பணி நியமனங்களில் நடந்த விதிமீறல்கள் அப்பட்டமாக தெரிய வந்துள்ளது.

கணித துறையில் இணை பேராசிரியராக நியமிக்கப்பட்ட ஒருவர் பி.எச்.டி. முடித்து 6 மாதமே ஆகிறது. ஆனால் கணிதத்துறையில் பி.எச்.டி. முடித்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் உதவி பேராசிரியர்கள் பலர் உள்ளனர். பணிமூப்பு அடிப்படையில் இவர்களை இணை பேராசிரியர்களாக நியமிக்காமல் புதிதாக பணியில் சேர்த்ததின் பின்னணி பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல என்ஜினீயரிங் பட்டப்படிப்பு தகுதியுடைய ஒருவர் சம்பந்தமே இல்லாமல் வேதியியல் துறை உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சுற்றுச்சூழல் அறிவியல் துறைக்கு பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களின் தகுதியும் கேள்விக்குறியாக இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மொத்தத்தில் கணபதியால் நியமிக்கப்பட்ட பேராசிரியர்களில் 50 சதவீதத்துக்கும் மேல் தகுதியுடையவர்களா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பேராசிரியர்களிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக மேலும் பல ஆவணங்களை திரட்டி வருகிறார்கள்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், பணி நியமனத்தில் முறைகேடு உறுதிபடுத்தப்பட்டால் பணம் கொடுத்த பேராசிரியர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும், இவ்வழக்கில் இருந்து தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்றார். #tamilnews