செய்திகள்

துணைவேந்தர் கைது: பாரதியார் பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு வந்த கோவை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராஜேஷ் தலைமையிலான போலீசார் துணைவேந்தர் அறையில் சில முக்கிய தகவல்களை சேகரித்ததாக கூறப்படுகிறது.

மாலை மலர்

கோவை:

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி(வயது 67), பேராசிரியர் பணி நியமனத்துக்கு ரூ.30 லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக இருந்த வேதியியல் துறை தலைவர் தர்மராஜூம் கைது செய்யப்பட்டார்.

மேலும் இவர்களுக்கு உதவியதாக தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணன், துணை வேந்தரின் மனைவி சொர்ணலதா ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக உயர் கல்வித்துறை கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் கணபதியை சஸ்பெண்டு செய்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று இரவு உத்தரவிட்டார். அடுத்த துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதற்காக ஒருங்கிணைப்பு குழு அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உயர் கல்வித்துறை செயலாளர் தலைமையில் செயல்படும் இந்த குழுவில் கவர்னரின் பிரதிநிதி ஒருவர், சிண்டிகேட் உறுப்பினர்கள் 2 பேர் இடம் இடம் பெறுவார்கள். அந்த உறுப்பினர்களாக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து முடிவு செய்வதற்காக நாளை (வியாழக்கிழமை) சிறப்பு சிண்டிகேட் கூட்டம் நடைபெற உள்ளது.

துணைவேந்தருடன் கைதான பேராசிரியர் தர்மராஜூம் 48 மணி நேரத்திற்கும் மேலாக ஜெயிலில் உள்ளார். எனவே அவரை சஸ்பெண்டு செய்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக விதிமுறைகளின் அடிப்படையில் சிறப்பு சிண்டிகேட் கூட்டத்திலேயே சஸ்பெண்டு செய்யப்படலாம். அல்லது ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டதும் சஸ்பெண்டு செய்யப்படுவார் என பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கணபதியின் ஊழலுக்கு உடந்தையாக இருந்த தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே அவர் பணி நியமிக்கப்பட்டதிலேயே விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மதிவாணன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வந்தவர். கணபதி துணைவேந்தராக நியமிக்கப்பட்ட சில மாதங்களிலேயே மதிவாணனை தொலைதூர கல்வி இயக்குனர் பொறுப்பில் நியமித்தார். பேராசிரியர் பணியில் இல்லாத மதிவாணனை தொலைதூர கல்வி இயக்குனராக நியமிப்பதற்கு அப்போதே எதிர்ப்பு கிளம்பியது.

பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் செந்தில் வாசன், சிண்டிகேட் உறுப்பினர் கமலக்கண்ணன் உள்பட மேலும் சில உறுப்பினர்கள் மதிவாணன் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதை பற்றி கவலைப்படாமல் மதிவாணனை தொலைதூர கல்வி இயக்குனராக கணபதி நியமித்துள்ளார்.

மதிவாணன் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் தொலைதூர கல்வி மையங்கள் நிறுவி துணைவேந்தர் பலகோடி ரூபாய் குவித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே மதிவாணன் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து உயர் கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

இதேபோல பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரித்து காட்டி, அவர்களுக்கு உணவு வழங்கியதாக போலி பில்கள் தயாரித்து பல லட்ச ரூபாய் சுருட்டினார் என்று கணபதி மீது புகார் எழுந்துள்ளது.

பழைய விடைத்தாள்களை தனியாருக்கு விற்றதிலும் முறைகேடு செய்து லட்சக்கணக்கில் மோசடி நடந்திருப்பதாக பல்கலைக்கழக பேராசியர் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து துறை ரீதியாக தீவிர விசாரணை நடத்தி இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

கணபதியின் லஞ்ச வழக்கில் பேராசிரியர் தர்மராஜ், மதிவாணன் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளது. கணபதியின் மனைவி சொர்ணலதா மீது தடயத்தை அழிக்க முயன்றதாக குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்படும், இந்த வழக்கு இந்த 4 பேரோடு முடியும் என போலீசார் தெரிவித்தனர்.

அதேநேரம் கணபதியால் நியமிக்கப்பட்ட பணி நியமனங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அதில் தவறு கண்டறியப்பட்டால் அதுகுறித்து தனியாக வழக்குபதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கோவை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராஜேஷ் தலைமையிலான போலீசார் இன்று காலை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து பதிவாளர் (பொறுப்பு) வனிதாவிடம், மதிவாணன் குறித்தும், மேலும் சிலர் பேராசிரியர்கள் பற்றியும் விசாரித்ததாக தெரிகிறது. மேலும் அவர்கள் துணைவேந்தர் மீதான புகார்களுக்கு ஆதாரம் திரட்டினர். அவர்கள் கம்ப்யூட்டர், ஹார்டுடிஸ்க் கொண்டு வந்திருந்தனர்.

அதில் துணைவேந்தர் அறையில் சில முக்கிய தகவல்களை சேகரித்ததாக கூறப்படுகிறது.

மதியம் 12.05 மணிக்கு உள்ளே சென்ற டி.எஸ்.பி. ராஜேஷ் 12.45 மணிக்கு சோதனை முடிந்து வெளியே வந்தார். அவர் இந்த சோதனை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் பிடி நெருங்கி வருவதால் பல்கலைக்கழகம் பரபரப்புடன் காணப்படுகிறது. 2 நாள் விடுமுறையில் சென்று இருந்த மதிவாணன் இன்று பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. #tamilnews