செய்திகள்

கைலாச யாத்திரைக்கு தடை: சீன பொருட்களை புறக்கணிக்க விசுவ இந்து பரி‌ஷத் அழைப்பு

கைலாச யாத்திரை சென்ற பக்தர்களை தடுத்து நிறுத்தியதால், சீன பொருட்களை இந்தியாவில் யாரும் வாங்க கூடாது என்று விசுவ இந்து பரி‌ஷத் வலியுறுத்தி உள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

இந்துக்களின் புனித ஸ்தலமாக கருதப்படும் கைலாசம் மன்சரோவர் பகுதி திபெத் நாட்டில் இமயமலை பகுதியில் உள்ளது. இந்த இடத்துக்கு இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான யாத்திரை தற்போது தொடங்கி உள்ளது. யாத்திரை குழுவினர் சிக்கிமில் உள்ள நாதுலா கனவாய் வழியாக திபெத்துக்கு செல்வார்கள். 50 பேர் கொண்ட முதல் யாத்திரை குழு அந்த இடத்துக்கு சென்றது. அவர்களை திபெத்துக்குள் செல்ல விடாமல் சீன படைகள் தடுத்து நிறுத்தி உள்ளன.

2 நாட்களுக்கு முன்பு இந்திய ராணுவ படையினர் சீன பகுதிக்குள் நுழைந்து விட்டதாக கூறி அங்கிருந்த இந்திய பதுங்கு குழிகளை சீன ராணுவம் அழித்தது.

இந்திய ராணுவம் சீனாவுக்குள் அத்துமீறி நுழைவதாக குற்றம் சாட்டி அதற்கு பதிலடியாக இந்திய யாத்திரை குழுவினரை தடுத்து நிறுத்தி உள்ளனர். இது, இந்துக்கள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இது சம்பந்தமாக விசுவ இந்து பரி‌ஷத் இணை பொதுச் செயலாளர் சுரேந்திரகுமார் ஜெயின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

கைலாச யாத்திரை செல்லும் இந்திய பக்தர்களை சீனா தடுத்து நிறுத்தி இருக்கிறது. கைலாசம் அமைந்துள்ள திபெத் பகுதி சீனாவால் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி ஆகும். அங்கு இந்துக்கள் புனித யாத்திரை செல்வதை தடுப்பது தவறானது.

இதற்கு பதிலடியாக சீன பொருட்களை இந்தியாவில் யாரும் வாங்க கூடாது. மத்திய அரசு உடனடியாக இந்த வி‌ஷயத்தை சீனாவிடம் கொண்டு சென்று உரிய தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.