அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆதரவாளரும், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளருமான பி.வெற்றிவேல் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
பொதுச்செயலாளர் சசிகலா, துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரை எடப்பாடி பழனிசாமி அணியினர் நீக்கியதாக தீர்மானம் நிறைவேற்றியது செல்லாது. அது ஒரு மோசடி தீர்மானம். யாரை திருப்திபடுத்த அந்த தீர்மானத்தை போட்டார்கள்.
சேகர் ரெட்டியையும், அன்புநாதனையும் திருப்தி படுத்த தீர்மானம் போடுகிறார்களா? எங்களை ஏமாற்றியவர்கள் டெல்லியையும் ஏமாற்றுவார்கள். இது டெல்லிக்காரர்களுக்கு தெரியாதா? இவர்களை வாழ வைத்த கட்சியை ஒருமாதத்தில் ஒருவரும், 6 மாதத்தில் மற்றொருவரும் ஏமாற்றுகின்றனர். கட்சி தொண்டர்கள் யாரும் இதுபற்றி கவலைப்பட வேண்டாம். சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் உங்களை வழி நடத்தி செல்வார்கள். கட்சியைப்பற்றி நாம் கவலைபட வேண்டாம்.
புதிய நிர்வாகிகளை நியமித்து வருவதால் அவர்களுக்கு பயம் வந்து விட்டது. இனி ஆட்களை நீக்குவார்கள் என்று பயப்படுகிறார்கள். டி.டி.வி.தினகரன் வெளி மாவட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கி விட்டு தலைமை கழகம் வருவார். நாங்கள் அங்கு வருவதை தடுக்க முடியாது.
டெல்லியை பார்த்து பயந்தவர்கள் இப்போது எங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். ஆளும் கட்சியில் இப்படி குடுமிப்பிடி சண்டை போட்டால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தி.மு.க. கொண்டு வரும். எங்கள் ஆதரவு யாருக்கு என்பதை அப்போது பார்க்கலாம்.
ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து பல நாட்கள் ஆகி விட்டது. ஆனால் தொண்டர்கள் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. அ.தி.மு.க. கட்சி உறுதியுடன் இருக்கும். எங்கும் போய் விடாது.
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்ட பயனை ஆர்.கே. நகரிலும், எனது தொகுதியிலும் அமைச்சர் கொடுக்கவில்லை. அந்த திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றால் ரூ.2,500-ம், 50 ஆயிரம் வழங்க ரூ.5 ஆயிரமும் கமிஷன் வேண்டும் என்று அமைச்சர் சரோஜா கேட்கிறார்.
இந்த குற்றச்சாட்டை முதல்வரிடம் தெரிவித்தேன். அவசரப்பட வேண்டாம் என்றும் இது பற்றி விசாரிப்பதாகவும் முதல்- அமைச்சர் தெரிவித்தார். கமிஷன் பிரச்சனையால் என் தொகுதியில் இன்னும் தாலிக்கு தங்கம் வழங்கப்படவில்லை.
அ.தி.மு.க. விதிகளில் கடைசிக்கு முந்தைய விதியில் (45) பொதுச்செயலாளருக்கு ஒரு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவ்வப்போது எழும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நியாயமான காரணம் இருப்பதாக பொதுச்செயலாளர் கருதினால் கட்சிக்கான சட்ட விதிகள் எதையும் தளர்த்துவதற்கும் விதிவிலக்கு அளிப்பதற்கும் பொதுச்செயலாளருக்கு அதிகாரம் உள்ளது.
1976-ம் ஆண்டில் இருந்து அந்த விதி அமலுக்கு வந்துள்ளது. ஒரு அசாதாரண சூழ்நிலையில் ஜெயலலிதா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது பொதுக்குழு கூடி அவரை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது. அதன் பிறகு நடந்த கட்சி தேர்தலில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்ற போது என்ன விதிமுறை கடைப்பிடிக்கப்பட்டதோ அதே விதிமுறையைத்தான் சசிகலா பொதுச்செயலாளர் பதவி ஏற்றதிலும் பின்பற்றப்பட்டது. அம்மா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு செயல்பட்ட போது கட்சி நடவடிக்கைகளை எடுத்தாரோ அது போலத்தான் சசிகலாவும் புதிய நிர்வாகிகள் நியமனம், நீக்கம் போன்றவற்றை மேற்கொண்டார்.
இது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போன்றவர்களுக்கு நன்றாக தெரியும். இதனை ஏற்றுக்கொண்டதன் மூலம்தான் சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது ஏற்றுக்கொண்ட ஓ.பி.எஸ்., எடப்பாடி உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் இப்போது மறுப்பது ஏன்? அம்மாவிற்கு பின்பற்றப்பட்ட விதிமுறைகளை பின்பற்றித் தான் நாங்கள் செல்கிறோம்.