சென்னை:
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்ததால், அதுபற்றி விசாரிக்க ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்த ஆணையம் சார்பில் ஜெயலலிதாவுடன் தொடர்புடையவர்களை அழைத்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21-ந்தேதி ஓட்டுப்பதிவு நடப்பதற்கு ஒரு நாளைக்கு முன்பு அதாவது 20-ந்தேதி, டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் சுமார் 20 வினாடிகள் ஓடும் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சிகளை வெளியிட்டார். அந்த வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்கள் மத்தியில் அந்த வீடியோ காட்சிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இதனால் தேர்தல் ஆணையம் சார்பில் வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதுபோல ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் அந்த வீடியோ காட்சிகள் உள்ளதாக கூறி விசாரணை ஆணையம் சார்பில் அண்ணா சதுக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
விசாரணை ஆணைய புகாரை ஏற்றுக் கொண்ட அண்ணா சதுக்கம் போலீசார், வெற்றிவேல் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 468, 471, 176, 177 மற்றும் 189 ஆகிய 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அதுபோல தேர்தல் கமிஷன் புகாரை ஏற்று வெற்றிவேல் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 188 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 126 (1)(பி) ஆகிய 2 பிரிவுகளில் வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து ஜாமீனில் வெளியில் வர முடியாத சட்டப்பிரிவில் வெற்றி வேலை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து அவர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் முன் ஜாமீன் மனு செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு வெற்றிவேல் மனு செய்தார். அந்த மனுவில் அவர் அளித்துள்ள விளக்கம் வருமாறு:-
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த 20 வினாடி வீடியோ காட்சியை நான் கடந்த பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் சசிகலாவிடம் இருந்து தினகரன் மூலம் பெற்றேன். ஆனால் அந்த வீடியோ காட்சிகளை மார்பிங் செய்து வெளியிட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அந்த வீடியோ காட்சிகள் பற்றி எந்தவித ஆய்வும் விசாரணையும் நடத்தப்படாமலே அது மார்பிங் செய்யப்பட்டது என்ற முடிவுக்கு எப்படி வர முடியும்? ஆளும் கட்சியினர் தூண்டுதலால்தான் என் மீது இத்தகைய வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
அதுபோல ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் ஆணையமும் என்னிடம் விசாரணை நடத்தாமலேயே என் மீது புகார் அளித்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரத்தின் நிறைவின் போது, ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலாவே காரணம் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமான துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். அதைத் தடுத்து நிறுத்த தேர்தல் கமிஷன் தவறி விட்டது.
ஜெயலலிதா மரணம் விஷயத்தில் உண்மையை மறைத்து, எங்கள் பொதுச்செயலாளர் சசிகலாவை அரசியல் ரீதியாக பழி வாங்கும் நோக்கத்துடன் தொடர்ந்து திட்டமிட்டு ஆளும் கட்சியினர் பிரசாரம் செய்கிறார்கள். எனவேதான் மக்கள் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சியை நான் வெளியிட்டேன்.
தலைமை செயலகத்தில் தான் நான் அதை வெளியிட்டேன். ஆர்.கே.நகர் தேர்தலுக்கும் அந்த வீடியோ வெளியிட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவ்வாறு தனது மனுவில் வெற்றிவேல் விளக்கம் அளித்துள்ளார்.