ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 1000 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த ஆசியாவிலேயே மிகப்பெரிய நவீன கால் நடை பூங்கா அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்று அங்குள்ள கால்நடை பூங்காக்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். தலைவாசலில் அமையும் கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்காக பல்வேறு விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தலைவாசலில் கால்நடை பூங்கா அமைப்பதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்தது.
ரூ.1000 கோடியில் பூங்கா அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.
விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.
வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி விவசாய பெருவிழா குறித்து பேசினர். கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலாளர் கோபால் திட்ட விளக்க உரையாற்றினார்.
விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். விவசாய பெருவிழா மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், வாரிய தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள், திரளாக பங்கேற்றனர்.
3 பிரிவுகளாக அமைய உள்ள இந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவில் முதலாவது பிரிவில் நவீன வசதிகளை கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக்காட்டும் கறவை மாட்டு பண்ணை, உள்நாட்டு மாட்டு இனங்களான காங்கேயம், உம்பளாசேரி, கோழி இன பிரிவுகள், நாட்டின நாய் ஆகியவற்றிற்காக இனப் பெருக்க பிரிவுகளை கொண்ட கால்நடை பண்ணை வளாகம் அமைக்கப்பட உள்ளது.
2-வது பிரிவில் பால், இறைச்சி, மீன், முட்டை பேன்ற உணவு பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தவும், அவற்றில் இருந்து பல்வேறு உபபொருட்கள், மதிப்பு கூட்டிய பொருட்களை தயார் செய்யவும், அவற்றை சந்தைப்படுத்தும் வசதி ஆகியன ஏற்படுத்தப்படும்.
3-வது பிரிவில் பயிற்சி, விரிவாக்கம், கல்வி ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலாக்கத்துடன் பல்வேறு அம்சங்கள் கொண்ட வளாகம் அமைக்கவும் முடிவு செய்யப்பட் டுள்ளது.
ஒருங்கிணைந்த கால்நடை பண்ணையின் ஒரு அங்கமாக கால்நடை அறிவியல் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனம் ஏற்படுத்தப்பட உள்ளது. இங்கு ஆண்டுக்கு 80 மாணவர்கள் படிக்கலாம். முதல்கட்டமாக 40 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதன்பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை 80 ஆக உயர்த்தப்படும்.இதன் மூலம் தமிழகத்தில் கால்நடை மருத்துவ சேர்க்கைக்கான இடங்கள் 360-ல் இருந்து 440ஆக உயரும்.
கால்நடை மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த கால்நடை, மீன்வளம், பால்வளம் ஆராய்ச்சி மையமும், பிரமாண்டமாக சர்வதேச தரத்தில் அமைகிறது. இது தவிர கால்நடை வளர்ப்பு பயிற்சி மையம், பால் பதப்படுத்துதல், ஏற்றுமதி மையம் மிகப்பெரிய அளவில் அமைக்கப்படுகிறது.
தரமான நாட்டுக்கோழிகள் வழங்குவதற்காக நாட்டு கோழி இனப்பெருக்க பண்ணையுடன் இணைந்த குஞ்சு பொரிப்பகம், தீவன அலகு ரூ. 48.81 கோடியில் பிரமாண்டமாக அமைக்கப்படுகிறது.
நாளையும், நாளை மறுநாளும் அங்கு கருத்தரங்கம் நடக்கிறது. இதில் சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து 20 ஆயிரம் மாணவ - மாணவிகள் வரவழைக்கப்பட்டு கால்நடை பற்றிய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
கால்நடை கல்லூரிகளில் சேருவது பற்றி பேராசிரியர்களும், கல்வியாளர்களும் விளக்கம் அளிக்கிறார்கள்.