கோப்புபடம் 
செய்திகள்

சமூகவலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றிய கால்நடை ஆய்வாளர் குண்டர் சட்டத்தில் கைது

சமூகவலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றிய கால்நடை ஆய்வாளர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி:

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் அருண் (வயது 52). இவர், மணப்பாறை அருகே உள்ள என்.பூலாம்பட்டி கிராமத்தில் கால்நடை ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

சமீபத்தில் திருச்சி மாநகர சமூக ஊடகதள பிரிவு போலீசார், இணைய தள குற்றங்களை தடுக்கும் வகையில் சமூக வலைத்தளங்களை கண்காணித்தனர். அப்போது ஆய்வாளர் அருண், தனது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கத்தில் குழந்தைகள் மற்றும் இளம்பெண்களின் ஆபாச படங்களையும், வீடியோக்களையும் வைத்திருந்ததும் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து பகிர்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கால்நடை ஆய்வாளர் அருண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் குழந்தைகள் மற்றும் இளம்பெண்களின் ஆபாச படங்களை சமூக வலை தளங்களில் பகிர்ந்த ஆய்வாளர் அருணை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார், மாநகர போலீஸ் கமி‌ஷனர் லோகநாதனிடம் பரிந்துரைத்தனர். அவர் உத்தரவிட்டதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் அருணை போலீசார் கைது செய்து, அதற்கான உத்தரவை திருச்சி மத்திய சிறையில் வழங்கினர்.