லக்னோ:
1938-ம் ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநிலம் கைரானாவில் பிறந்த ஹகும் சிங், 1974-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் முதன்முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1983-85 ஆண்டுகளில் சட்டசபை துணை சபாநாயகராக பணியாற்றியுள்ளார். 1996-ம் ஆண்டு பா.ஜ.க.வுக்கு தாவிய இவர் எம்.எல்.ஏ.வாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் கைரானா தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஹகும் சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.