செய்திகள்

வேப்பம்பட்டு அருகே இடி தாக்கியதால் வீடு தீப்பிடித்தது: அண்ணன்-தங்கை பலி

வேப்பம்பட்டு அருகே இடி தாக்கி வீடு தீப்பிடித்ததில் அண்ணன், தங்கை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

செவ்வாப்பேட்டை:

வேப்பம்பட்டை அடுத்த கிளாம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 40), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுகுணா (36). இவர்களது மகன்கள் தமிழரசு (12), இளவரசன் (7), மகள் சுரேகா (10).

இவர்களில் தமிழரசு அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பும், சுரேகா 6-ம் வகுப்பும், இளவரசன் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர். இவர்களுடன் ஜெகதீசனின் தாய் மீனாட்சியும் வசித்து வருகிறார்.

நேற்று இரவு அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு தூங்கினர். நள்ளிரவு 11 மணி அளவில் அப்பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

அப்போது திடீரென வீட்டின் ஜன்னலில் இடி தாக்கியது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. மின் வயர்கள் தீப்பொறியுடன் பற்றி எரிந்தது.

அதிர்ச்சி அடைந்த ஜெகதீசன் குடும்பத்துடன் தப்பிக்க முயன்றார். வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்ததால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. அனைவரும் தீயில் சிக்கி கூச்சலிட்டனர்.

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயில் சிக்கிய தமிழரசும், சுரேகாவும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தனர்.

ஜெகதீசன், அவரது மனைவி சுகுணா, மகன் இளவரசன் மற்றும் ஜெகதீசனின் தாய் மீனாட்சி ஆகியோர் உடல் கருகி உயிருக்கு போராடினர்.

இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு ஆம்புலன்சு வர தாமதமானது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் தாசில்தார் தமிழ்ச்செல்வன், டி.எஸ்.பி. புகழேந்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசினர்.

காயம் அடைந்த ஜெகதீசன் உள்பட 4 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் சிறுவன் இளவரசனின் நிலைமை மோசமாக இருந்தது. இதையடுத்து அவனை மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இளவரசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஜெகதீசன் தொகுப்பு வீட்டில் வசித்து வந்தார். மழை பெய்தபோது வீட்டின் ஜன்னல் வழியாக இடி தாக்கி தீப்பிடித்தது. இதில் வீட்டின் ஜன்னல் உடைந்தது. மேலும் வீட்டின் சுவர்களும் பலத்த சேதம் அடைந்துள்ளன.

வீட்டில் தீப்பிடித்தவுடன் அக்கம் பக்கத்தினர் விரைந்து தீயை அணைத்ததால் மற்றவர்கள் உயிர் தப்பினர்.

இடி தாக்கியதால் அண்ணன்-தங்கை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.