செய்திகள்

வேப்பம்பட்டு அருகே ஆஸ்பத்திரி முன்பு கொட்டப்படும் மாத்திரைகள்: சிறுவர்கள் எடுத்து விளையாடுவதால் பீதி

வேப்பம்பட்டு அருகே ஆஸ்பத்திரி முன்பு கொட்டப்படும் மாத்திரைகளை சிறுவர்கள் எடுத்து விளையாடுவதால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால் பெற்றோர் பீதி அடைந்துள்ளனர்.

மாலை மலர்

செவ்வாப்பேட்டை:

வேப்பம்பட்டை அடுத்த பெருமாள்பட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு வேப்பம்பட்டு ஆயத்தூர், பெருமாள்பட்டு, கந்தன் கொல்லை உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் உள்ள காலாவதியான மாத்திரைகளை அருகிலேயே கொட்டி வைத்துள்ளனர். இதனை ஆஸ்பத்திரிக்கு வரும் சிறுவர்கள் எடுத்து விளையாடி வருகிறார்கள். இதன் காரணமாக சிறுவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால் பெற்றோர் பீதி அடைந்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இது குறித்து பெருமாள்பட்டை சேர்ந்த வெங்கடேசன் கூறும்போது, “ஆஸ்பத்திரி முன்பு காலாவதியான மாத்திரைகள் கொட்டப்படுகிறது. சுகாதார அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தும், அதனை அகற்றவில்லை. மாத்திரைகளை கொட்ட இடமில்லை என்று கூறுகின்றனர். மேலும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை பணிபுரியும் ஊழியர்கள் மதிப்பதில்லை. இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.