செய்திகள்

வேப்பம்பட்டு அருகே மின்சார ரெயிலில் 2 மாணவர்களுக்கு கத்திக்குத்து

வேப்பம்பட்டு அருகே மின்சார ரெயிலில் 2 மாணவர்களுக்கு கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

செவ்வாய்பேட்டை:

வேப்பம்பட்டு, பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ஆனந்தபாபு (16). அம்பத்தூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ. கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று மாலை அவர் கல்லூரி முடிந்து உடன் படிக்கும் தண்ணீர்குளத்தை சேர்ந்த விஜயகுமாருடன் (17). அம்பத்தூரில் இருந்து மின்சார ரெயிலில் வந்தார்.

வேப்பம்பட்டு அருகே ரெயில் வந்து கொண்டு இருந்த போது அருகே இருந்த 3 வாலிபர்கள் திடீரென ஆனந்தபாபு, விஜயகுமாருடன் தகராறில் ஈடுபட்டு தாக்கினர்.

திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினர். இதில் ஆனந்த பாபுவுக்கும், விஜய குமாருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர்.

இதற்குள் மின்சார ரெயில் வேப்பம்பட்டு ரெயில் நிலையம் வந்தடைந்தது. உடனே 3 வாலிபர்களும் கத்தியுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

பலத்த காயம் அடைந்த மாணவர்கள் 2 பேரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை ஆவடியில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற அரசு பஸ் (572) வேப்பப்பட்டு ரெயில் நிலையம் அருகே நின்றது. அதில் இருந்து மாணவர்கள் சிலர் இறங்கினர்.

அப்போது அங்கு உருட்டு கட்டையுடன் தயாராக நின்ற கும்பல் மாணவர்களை சுற்றி வளைத்து தாக்கினர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் அலறியடித்து ஓடினர்.

சிறிது நேரத்தில் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். காயம் அடைந்த மாணவர்களும் சென்று விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெமிலிச்சேரி ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர் கத்தியுடன் ரகளை செய்து பயணிகளை அச்சுறுத்தினார். தற்போது அடுத்தடுத்து மாணவர்களிடையே ஏற்படும் மோதல் பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.