இண்டியன்வெல்ஸ்:
அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், ஸ்பெயின் வீராங்கனை கார்லா சுவாரசை எதிர்கொண்டார்.
இதில் துவக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 6-2 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இண்டியன்வெல்ஸ் தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இதேபோல் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை டேரியா கசத்கினா, முன்னாள் நம்பர்-1 வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரை 6-0, 6-2 என வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்தார்.
இன்று நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் வீனஸ்- கசத்கினா மோத உள்ளனர். மற்றொரு அரையிறுதியில் சிமோனா ஹாலெப்-நவோமி ஒசாகா பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.