செய்திகள்

எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதால் எந்த பலனும் இல்லை - வேணுகோபால் எம்.பி.

காவேரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதால் எந்த பலனும் இல்லை என்று வேணுகோபால் எம்.பி.கூறியுள்ளார்.

மாலை மலர்

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள அம்பேத்கார்நகரில் ரத்ததான முகாம் நடை பெற்றது. வேணு கோபால் எம்.பி. முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவேரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் தமிழக அரசு சரியான போக்கைதான் கடைபிடித்து வருகிறது. எங்கள் கட்சியை சேர்ந்த 50 எம்பிக்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து போராடி வருகிறோம்.

இந்த நிலையில் எங்களது கட்சியை சேர்ந்த முத்துகருப்பன் ராஜினாமா செய்வதாகவும், திங்கட்கிழமை ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவரிடம் ஒப்படைப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இப்படி ராஜினாமா செய்வதால் எந்த வித பிரயோஜனமும் கிடையாது. காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் தமிழக அரசு சரிவர செயல் படவில்லை என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைத்திருக்கும் அவர் ஏன் கர்நாடகாவுக்கு சென்று அம்மாநில முதல்-அமைச்சர் சித்தராமையாவை சந்தித்து காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கேட்கவில்லை. தமிழக விவசாயிகளின் மீது அவருக்கு அக்கறை இல்லாததைதான் இது காட்டுகிறது.

அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் ரகசிய கூட்டு வைத்து கொண்டுள்ளது என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டுவதில் எள்ளளவு உண்மை கிடையாது.

ஆந்திரவுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்க வலியுறுத்தி தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளின் எம்பிகள் ராஜினாமா செய்வதை ஏற்று கொள்ள முடியாது.

இவ்வாறு டாக்டர் வேணுகோபால் எம்.பி. நிருபர்களிடம் கூறினார்.