செய்திகள்

துணை ஜனாதிபதி தேர்தல்: பா.ஜனதா வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிப்பு

துணை ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் முடிவதைத் தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தற்போது நடந்து வருகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான 18 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்க முன்னாள் கவர்னரும் மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ணகாந்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் நாளை மனு தாக்கல் செய்ய உள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரிக்கும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்திக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவரை எதிர்த்து களம் இறங்கப் போகும் பா.ஜனதா கட்சி வேட்பாளர் யார் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுவி வந்தது.

இந்த நிலையில் மத்திய மந்திரி வெங்கையாநாயுடு துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்வாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. கடந்த சனிக்கிழமை அவரை பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தொடர்பு கொண்டு இது குறித்து பேசினார்.

இந்நிலையில் துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக பா.ஜ.க. ஆட்சி மன்றக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, கட்சியின் தலைவர் அமித்ஷா, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வெங்கையா நாயுடுவை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பிறகு பா.ஜ.க. தலைவர் அமித்ஷா இதனை அறிவித்தார்.

பா.ஜ.க.வில் முக்கிய மூத்த தலைவராகவும், மத்திய நகர்புற மேம்பாட்டு மந்திரியாக உள்ள வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளதால் துணை ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.