புதுடெல்லி:
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் அந்த கூட்டணியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து புதிய ஆட்சியை அமைத்தார்.
இதற்கு ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர்களில் ஒருவரான சரத்யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் நிதிஷ்குமாருக்கும், சரத்யாதவுக்கும் இடையே மோதல் வெடித்தது.
சரத்யாதவ் டெல்லி மேல-சபை ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவராக இருந்து வந்தார். அந்த பதவியை நிதிஷ்குமார் பறித்தார்.
இந்த நிலையில் சரத் யாதவ் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு எதிராக உள்ள கட்சிகளுடன் கைகோர்த்துள்ளார். சமீபத்தில் லல்லுபிரசாத் நடத்திய ராஷ்ட்ரீய ஜனதா தளம் மாநாட்டில் சரத்யாதவ் கலந்து கொண்டார்.
இதை காரணம் காட்டி கட்சி தாவல் தடை சட்டத்தின்படி சரத் யாதவின் பதவியை பறிக்க நிதிஷ்குமார் அணியினர் முயற்சித்து வருகிறார்கள்.
ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் ஆர்.சி.பி.சிங், சஞ்சய் ஷா ஆகியோர் சமீபத்தில் துணை ஜனாதிபதியும், மேல்-சபை தலைவருமான வெங்கையா நாயுடுவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
அதில், கட்சி தாவல் தடை சட்டத்தின்படி சரத் யாதவின் பதவியை பறிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
இது சம்பந்தமாக ஆர்.சி.பி.சிங் கூறும்போது சரத்யாதவ் எங்களுக்கு எதிராக உள்ள கட்சிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இது சம்பந்தமாக அவரிடம் நாங்கள் விளக்கம் கேட்பதற்கு பல முறை முயன்றோம். ஆனால், முடியவில்லை. அவர் எங்கள் கட்சிக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு எதிர்க் கட்சிகளுடன் கைகோர்த்து இருப்பதால் அவரது எம்.பி. பதவியை கட்சி தாவல் தடை சட்டப்படி பறிப்பதற்கு உரிமை உள்ளது.
எனவே, அதன் அடிப்படையில் அவரது பதவியை பறிக்க மேல்- சபை தலைவரிடம் கேட்டு இருக்கிறோம். இந்த விஷயத்தில் மேல்-சபை தலைவருக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது. அவருடைய முடிவில் கோர்ட்டு கூட தலையிட முடியாது. அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.