கோவை விமான நிலையத்தில் மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் பா.ஜனதா எவ்வித குறுக்கீடும் செய்யவில்லை. தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்காக இன்றைய அ.தி.மு.க. அணிகள் ஒன்று கூடி செயல்பட வேண்டும்.
இதுவரை இருந்த இந்திய பிரதமர்களில் நரேந்திர மோடி மிகவலிமையான பிரதமராக திகழ்ந்து வருகிறார். 3 ஆண்டு பா.ஜனதா ஆட்சி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் தேர்வு பா.ஜனதாவின் வேட்பாளர் தேர்வாக அல்லாமல் தேசிய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராகத்தான் இருப்பார்.
மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் 4 பேர் சுட்டு கொல்லப்பட்டது துரதிர்ஷ்டமான ஒன்று. இதில் அந்த மாநில முதல்வர் பிரகாஷ் சிங் சவுகான் உடனடியாக நடவடிக்கை எடுத்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மற்றும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஊதி பெரிதாக்குகின்றனர்.
அப்சல் குரு, ரோகித் வெமுலா, இவர்கள் இறந்த போது காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி, விளம்பரத்துக்காக அங்கு சென்று போட்டோ எடுத்து போராட்டம் செய்வது போல் விளம்பர படுத்தி கொள்கிறார். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் போராட்டத்தில் ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்றது சட்டத்தை மதிக்காத செயல்.
இந்திய அளவில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், மற்ற மாநிலங்களை காட்டிலும் மத்திய பிரதேச மாநிலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இதில் 20 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எதிர்கட்சிகள் ஒன்றுகூடி பிரகாஷ் சிங்சவுகான் மீது வெறும் குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார்கள்.
பிரதம மந்திரியின் இன்சூரன்ஸ் திட்டம் மூலம் 50 ஆயிரம் கோடிக்கு இன்சூரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மிக குறைந்த பிரிமியத்தில் அதிக காப்பீடு தரப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய சாதனையாகும்.
கடந்த 50 ஆண்டுகளில் விவசாயிகள் பிரச்சனைக்கு காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட்டு கட்சிகளே காரணம்.
மாட்டிறைச்சி பிரச்சனையில் இறைச்சிக்கான தடையை எதிர்கட்சிகள் ஒன்று கூடி பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள்.