வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நீடிக்கிறது. உணவுப் பொருள் உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ தன்னை நாட்டின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டதால் அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
ஜூவான் குவைடோவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட சுமார் 50 நாடுகள் ஆதரவு தெரிவித்து அங்கீகரித்ததால், அந்த நாடுகளுடன் அதிபர் நிகோலஸ் மதுரோ மோதல் போக்கை கையாண்டு வருகிறார். ஆட்சியைக் கவிழ்க்க அந்த நாடுகள் முயற்சிப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
இதற்கிடையில் ஜூவான் குவைடோ கேட்டுக்கொண்டதன் பேரில் அமெரிக்கா போன்ற நாடுகள் வெனிசுலா மக்களுக்கு தேவையான உதவிப் பொருட்களை வழங்க முன்வந்தன. ஆனால் இந்த உதவிகளை மதுரோ ஏற்க மறுத்துவருகிறார். உதவிப் பொருட்கள் கொண்டு வருவதை தடுக்கும் வகையில் பிரேசில் எல்லையை மூடினார். ஐநா மூலம் வரக்கூடிய உதவிகளை மட்டும் ஏற்றுக்கொள்வதாக கூறினார்.
இதற்கிடையே மதுரோ தலைமையிலான அரசின் தடையை மீறி, நேற்று அண்டை நாடான கொலம்பியா சென்ற குவைடோ, அங்கு நிதி மற்றும் உதவிப்பொருட்கள் சேகரிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் கொலம்பிய அதிபர் இவான் டக்கும் கலந்துகொண்டார். அங்கிருந்து இன்று உதவிப் பொருட்களை வெனிசுலாவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியால் திரட்டப்பட்ட உதவிப்பொருட்கள் மற்றும் அமெரிக்காவின் உதவிப் பொருட்களை வெனிசுலாவுக்கு கொண்டு வர உள்ள நிலையில், பாலங்கள் மூடப்படுவதால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. உதவிப் பொருட்கள் மக்களை சென்று சேருவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.