காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், திருமுருகன் உள்ளிட்டோர் சென்னை சேப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது வேல்முருகன் பேசுகையில், ‘உணர்வெழுச்சியுடன் தமிழகம் தானாக பொங்கியெழுத்து போராடிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை இங்கு நடத்தக்கூடாது’ என தமிழ் அமைப்புகள் சார்பில் வலியுறுத்தினார்.
மேலும், ‘ஐ.பி.எல். நிர்வாகம், தமிழக அரசு, காவல்துறை ஐ.பி.எல். போட்டிகளுக்கு ஆதரவு தரக்கூடாது. மீறி போட்டியை நடத்த முயற்சித்தால், தமிழக அரசு அதற்கு உறுதுணையாக இருந்தால் எங்கள் அமைப்புகளின் தொண்டர்கள் டிக்கெட் வாங்கி கிரிக்கெட் மைதானத்திற்குள் சென்று ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்துவார்கள்’ என்றும் கூறினார்.