செய்திகள்

கிரிக்கெட் மைதானத்தில் பாம்பு விடுவதாக சொன்னது உண்மை - வேல்முருகன்

கிரிக்கெட் மைதானத்தில் பாம்பு விடுவதாக சொன்னது உண்மை தான் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். #Cauveryissue

மாலை மலர்

சென்னை:

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதால் மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பு கொடுப்பதில்லை. அதனால்தான் பிரதமர் மோடி சென்னை வந்த போது கருப்புக்கொடி காட்டினோம்.

காவிரி பிரச்சினைக்காக போராடுகிற நேரத்தில், மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தோம்.

ஆனால் அதையும் மீறி போட்டியை நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் திட்டமிட்டதால் எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க மைதானத்தில் பாம்புகளை விடுவோம் என்று கூறினேன். அது உண்மை தான்.

போராட்டங்கள், எதிர்ப்புகள் அதிகமானதால் தமிழகத்தில் இருந்து ஐ.பி.எல். போட்டியை சென்னையில் நடத்த முடியாமல் இப்போது வேறு ஊருக்கு மாற்றி உள்ளனர். தமிழகத்தில் இருந்து ஐ.பி.எல். போட்டியை விரட்ட போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசு காவிரி பிரச்சினையில் இன்னும் ஒரு தெளிவான முடிவை எடுக்காமல் உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

இதற்காக மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு அனுமதி கேட்டு போலீஸ் கமி‌ஷனரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.

மெரீனாவில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்து வருகின்றனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காவிரி பிரச்சினைக்காக மெரீனாவில் போராட போலீசார் அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சத்ரியன் வேணு கோபால் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். #Cauveryissue