வேலூர்:
வேலூர் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 26). இவர், வேலூரில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர், வேலூரைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க ஒரு பட்டதாரி இளம்பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
மேலும் அவர் அடிக்கடி அந்த இளம்பெண்ணை சந்தித்து தனது காதலை தெரிவித்துள்ளார். ஆனால் இளம்பெண், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வினோத்குமார், இளம்பெண்ணின் புகைப்படத்தை அவருடைய உறவினர் பெண் ஒருவர் மூலமாக பெற்றுள்ளார்.
அவர், இளம்பெண்ணின் புகைப்படத்தை தன்னுடன் இருப்பது போல் ‘மார்பிங்’ செய்துள்ளார்.
பின்னர் ‘மார்பிங்’ செய்யப்பட்ட புகைப்படத்தை இளம்பெண்ணிடம் காண்பித்து தன்னை காதலிக்கும்படி கூறி தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அழுதுகொண்டே இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி உள்ளார்.
இதற்கிடையே, வினோத்குமாரின் தந்தை சண்முகம் தனது உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் இளம்பெண்ணும், வினோத் குமாரும் காதலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் வேலூர் வடக்குப் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் புகைப்படத்தை ‘மார்பிங்’ செய்து காதல் தொந்தரவு கொடுத்த வினோத் குமாரை கைது செய்தார்.
இளம்பெண் குறித்து தவறான தகவல் பரப்பியது தொடர்பாக வினோத்குமாரின் தந்தை சண்முகம் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. #Tamilnews