வேலூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே பொத்தேரி ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு அருகே உள்ள புதரில் ரத்தக்காயங்களுடன் ஒரு பெண் இறந்து கிடப்பதை பார்த்த பயணிகள் இது குறித்து ரெயில்வே போலீஸ் மற்றும் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் புதரில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்த பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும், அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை, அந்த பெண் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா அணிந்து இருந்தார். அவரது உடல் அருகே சிறிய அளவில் கத்தி ஒன்று கிடந்தது. மேலும் உணவு எடுத்து செல்லும் டிபன் பாக்ஸ் மற்றும் மருந்து மாத்திரை அட்டைகள் இருந்தது.
இதனை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் அந்த பெண் கடந்த 24-ந் தேதி சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து காட்பாடிக்கு சென்றதாகவும், அங்கிருந்து நேற்று முன்தினம் சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வந்ததும் தெரியவந்தது.
இதன் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கொலையுண்ட பெண் வேலூர் சைதாப் பேட்டை பி.டி.சி.ரோடு சின்னமராட்டா தெருவை சேர்ந்த அப்பாஜி என்பவரது மனைவி ஷாஜிதா (30) என்பது தெரிந்தது.
அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. நேற்று இரவு மறைமலைநகர் போலீசார் வேலூர் வந்து விசாரணை மேற்கொண்டனர். ஷாஜிதாவை மர்ம நபர் ஒருவர் வேலைக்கு அழைத்து சென்றுள்ளார்.
வேலைக்கு சென்ற இடத்தில் ஷாஜிதா குத்திக்கொலை செய்து பிணத்தை வீசி சென்றுள்ளனர். அவரை கொலை செய்த கும்பல் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.