விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளாம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி. கடந்த மாதம் 21-ந் தேதி மர்ம நபர் அவரது வீட்டுக்குள் புகுந்து அங்கு தூங்கி கொண்டிருந்த ஆராயி, அவரது மகள் தனம், மகன் சமயன் ஆகியோரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றான். இந்த சம்பவத்தில் சமயன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டான்.
இந்த சம்பவம் தொடர்பாக அரகண்டநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும் குற்றவாளியை கண்டுபிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வீமராஜ், அசோக்குமார் ஆகியோர் தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று அதிரடி விசாரணை நடத்தினர்.
மேலும் பழைய குற்றவாளிகளின் படங்களையும் சேகரித்தனர். அப்போது கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியை சேர்ந்த வாலிபர் தில்லைநாதன் என்பவன் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதும், இதையொட்டி அவன் பலமுறை கைது செய்யப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
அவனது புகைப்படத்தை போலீசார் கைப்பற்றி வெள்ளாம்புத்தூர், அரகண்டநல்லூர், திருக்கோவிலூர், மணலூர் பேட்டை போன்ற பல்வேறு கிராமங்களுக்கு சென்று அங்குள்ள பொதுமக்களிடம் தில்லைநாதன் புகைப்படத்தை காண்பித்து, இந்த நபரை யாராவது பார்த்துள்ளீர்களா? இந்த பகுதிக்கு வந்தானா? என்று விசாரணையை மேற்கொண்டனர்.
அப்போது பழ வியாபாரி ஒருவரும், ஆட்டோ டிரைவரும் தில்லைநாதன் அந்த பகுதிக்கு அடிக்கடி வந்து சென்றதாக கூறினர். இதனால் போலீசார் உஷாரானார்கள்.
ஆராயி வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது தில்லைநாதன்தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து அவனை கைது செய்ய கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிரமாக தேடிவந்தனர். ஆனால், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தலைமறைவாக இருந்து வந்தான்.
போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த தில்லைநாதனை பிடிக்க இரவு-பகலும் ரோந்து சுற்றி போலீசார் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வந்த காமகொடூரன் தில்லைநாதன் போலீசில் சிக்கினான். #Tamilnews