சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது சில்லரை வணிகத்தை சீரழிக்கும் செயல் ஆகும். லட்சோப லட்சம் சிறுவணிகர்களின் வாழ்தாவாரத்தையும், வாழ்க்கை முறையையும் சின்னா பின்னாமாக்கி விடும்.
எனவேதான் அந்நிய நேரடி முதலீட்டை கடுமையாக எதிர்த்து வருகிறோம். அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் தமிழகத்தில் கால் ஊன்ற முயற்சித்த போது வணிகர்களை திரட்டி போராடினோம். அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த விஷயத்தில் வணிகர்களுக்கு துணையாக நின்றது மறக்க முடியாதது.
அன்று விரட்டப்பட்டு முன் வாசல் வழியாக வெளியேறி வால்மார்ட் நிறுவனம் இன்று இந்திய ஆன்-லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை வாங்கி பின் வாசல் வழியாக நுழைந்து சில்லரை வணிகத்தை ஒட்டு மொத்தமாக கைப்பற்ற பார்க்கிறது. மத்திய அரசு இதை அனுமதித்து இருப்பது கண்டிக்கத்தக்கது.
உள்நாட்டு வணிகத்தின் மீதும், வணிகர்கள் மீதும் உண்மையில் அக்கறையிருந்தால் பிளிப்கார்ட்- வால்மார்ட் உடன்பாட்டை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்க கூடாது. உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலக வேண்டும். வால்மார்ட் நிறுவனத்தை இந்தியாவிற்குள் நுழைய வணிகர்கள் அனுமதிக்கமாட்டோம். ஆன்லைன் வணிகத்தில் நுழைந்த வால்மாட்டை விரட்டி அடிப்போம்.
தேச விரோத வர்த்தக செயல்பாடுகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை என்றால் வணிகர் நலன் காக்க தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை நேரடியாக களம் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை எச்சரிக்கிறோம்.
இவ்வாறு த.வெள்ளையன் கூறினார். #tamilnews