செய்திகள்

சிறுவர்களுக்கு வாகனத்தை அளிக்கும் உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு

சிறுவர்களுக்கு வாகனம் அளிக்கும் வாகன உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாலை மலர்

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஊத்தங்கரை வட்டம், கல்லாவி, தேன்கனிக் கோட்டை வட்டம், ராயக்கோட்டை ஆகிய காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சில நபர்கள் சாதி மோதலை தூண்டும் வகையில் பேசி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்டு, இருவர் மீது வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு சாதி, மதக்கலவரத்தை தூண்டுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமந்தமலையைச் சேர்ந்த பெருமாளின் மகன் சத்யா (18) இவர் கடந்த 2-ந்தேதி இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரியில் இருந்து காவேரிப்பட்டணம் நோக்கிச் சென்றார். அப்போது அவதானப்பட்டி அருகே பச்சமுத்து நகரை சேர்ந்த சசிகுமாரின் மகன் பிரவீன்குமார் (15) என்பவர் லிப்ட் கேட்டு அந்த இருசக்கர வாகனத்தில் சென்றார். இருசக்கர வாகனம் காவேரிப்பட்டணம் திம்மாபுரம் பிரிவு சாலை அருகே கடந்து செல்லும்போது அந்த வழியாக வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியதில் பிரவீண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து கார் ஓட்டுநர் மீதும், இருசக்கர வாகனத்தை சிறுவனுக்கு அளித்த வாகனத்தின் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனவே இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறுவர்களுக்கு வாகனம் அளிக்கும் வாகன உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.