செய்திகள்

அமித்ஷா பாதுகாப்பு வாகனம் பசு மீது மோதியதால் பரபரப்பு

ஒடிசாவில் இருந்து ஜெய்ப்பூர் சென்று கொண்டிருந்த பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பாதுகாப்பாக சென்ற பைக், சாலையை கடக்க முயன்ற பசு மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாலை மலர்

ஜெய்ப்பூர்:

ஒடிசா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா ஈடுபட்டு வருகிறார். இதற்காக ஒடிசா சென்ற அவர், அங்குள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அதைதொடர்ந்து, ஒடிசாவில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட அமித்ஷா, இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

ராஜஸ்தான் மாநிலம் தேசிய நெடுஞ்சாலை 5ல் அமித்ஷா சென்று கொண்டிருந்தார். அப்போது பண்டாலோ என்ற பகுதியை கடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சாலையை கடக்க முயன்ற பசு மீது அமித்ஷாவின் பாதுகாப்புக்கு வந்த பைக் திடீரென மோதியது.

இதில் பசுவுக்கு காயம் ஏற்பட்டது. ஆனால், விபத்து நடக்கும் முன் அமித்ஷாவின் கார் அங்கிருந்து சென்றுவிட்டது.

இதுகுறித்து உள்ளூர் பா.ஜ.க.வினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீசாரை வரவழைத்து, காயம் அடைந்த பசுவுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர். இதைதொடர்ந்து டாக்டர்கள் பசுவுக்கு சிகிச்சை அளித்ததாக பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.