காய்கறிகள் 
செய்திகள்

மதுரையில் காய்கறி விலை பாதியாக குறைந்தது

மதுரை மார்க்கெட்டில் காய்கறி விலைகள் பாதியாக குறைந்துள்ளது. தக்காளி மற்றும் மிளகாய் வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.9-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மாலை மலர்

மதுரை:

மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் காய்கறிகள் அதிக அளவில் பயிர் செய்தனர்.

தற்போது மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளைந்த காய்கறிகள் வரத்து மார்க்கெட்டுகளில் அதிகரித்துள்ளது.

நாட்டு காய்கறிகளான கத்தரி, வெண்டை, அவரை, பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி உள்ளிட்ட காய்கறிகள் விலை பாதியாக குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு ரூ.25 வரை விற்பனை ஆன ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.9-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பச்சை மிளகாயும் கிலோ ரூ.9-க்கு விற்கப்பட்டது. கொத்தமல்லி வரத்து அதிகரிப்பு காரணமாக கிலோ ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டது.

முருங்கைக்காய் ரூ.30-க் கும், மாங்காய் ரூ.80-க்கும் விற்கப்படுகிறது. மலைப்பகுதி காய்கறிகளான கேரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளது. பீன்ஸ் கிலோ ரூ.75-க்கு விற்கப்படுகிறது.

மதுரை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வாழை விவசாயம் அதிகளவில் செய்யப்பட்டுள்ளதால் மார்க்கெட்டுகளுக்கு வாழை இலை கட்டுகள் வரத்தும் அதிகரித்துள்ளது. ஆனால் பண்டிகை மற்றும் முகூர்த்த காலம் என்பதால் வாழை இலைக்கு மக்கள் மத்தியில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இதனால் 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்கப்பட்டு வந்தது. இன்று விலை ஓரளவு குறைந்து அதிகபட்சமாக ரூ.2 ஆயிரமாக விற்கப்பட்டது. ஒரு இலை ரூ.10-க்கு விற்பனை ஆனது.

இது குறித்து சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தலைவர் பி.எஸ்.முருகன் கூறியதாவது:-

காய்கறி வரத்து அதிகரிப்பதன் காரணமாக விலைகள் குறைந்து வருகிறது. இன்னும் சில நாட்களிலும் மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

வாழை இலையை பொறுத்தவரை முகூர்த்த காலம் என்பதால் கிராக்கி ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது. அடுத்த வாரத்தில் இருந்து வாழை இலை விலை குறைய வாய்ப்புள்ளது.

காய்கறிகளில் தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி விலைகள் குறைந்துள்ளன. பீன்ஸ், மாங்காய் விலை அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.