காய்கறி விலை (கோப்புப்படம்) 
செய்திகள்

சுங்கச்சாவடி வரி உயர்வால் காய்கறி விலை அதிகரிக்கும் அபாயம்

சரக்கு வாகனங்களுக்கான சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் காய்கறி விலைகள் இன்னும் ஒரு வாரத்தில் உயரும் என்று வியாபாரி தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகளின் கட்டணம் 3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கீழ் 46 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.

புதிய கட்டண உயர்வுகள் தமிழகத்தில் கொடைரோடு, நல்லூர், விக்கிரவாண்டி, புதூர், பாண்டியபுரம், விஜயமங்கலம், வீரசோழபுரம் உள்ளிட்ட 15 சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சுமார் 30 கிலோ மீட்டருக்குள் சென்று வரும் கார், ஜீப் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கான கட்டணம் 60 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பஸ் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் 3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.

சுங்கச்சாவடியில் சரக்கு வாகனங்களுக்கான கட்டண உயர்வால் காய்கறிகள் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு காய்கறிகள் பெரும்பாலும் ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி மற்றும் ஆந்திரா, கேரளா ஆகிய இடங்களில் இருந்து காய்கறிகள் லாரிகளில் ஏற்றி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன.

தற்போது சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் காய்கறி விலைகள் உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

மொத்த வியாபார சங்க தலைவர் சவுந்தரராஜன் கூறும்போது, “சரக்கு வாகனங்களுக்கான சுங்கச் சாவடி கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் காய்கறி விலைகள் இன்னும் ஒரு வாரத்தில் உயரும்” என்றார்.

இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறும்போது, “சென்னையில் இருந்து மும்பைக்கு பொருட்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி செல்லும்போது சராசரியாக ரூ.4,500 வரை சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தினோம்.

தற்போது கட்டண உயர்வால் ஒருமுறை செல்ல கூடுதலாக ரூ.600 செலுத்த வேண்டி உள்ளது. ஏற்கனவே டீசல் மற்றும் இன்சூரன்ஸ் விலை உயர்வால் லாபம் குறைந்து உள்ளது.

இப்போது சுங்கச்சாவடி கட்டண அதிகரிப்பால் நிலைமை மேலும் மோசமாகும். முன்பு ஒரு மாதத்துக்கு 30 புக்கிங் வரை கிடைக்கும். ஆனால் தற்போது உற்பத்தி குறைவால் 10 புக்கிங் கிடைப்பதே சிரமமாக உள்ளது.

இது போன்ற சூழ்நிலைகளில் கூடுதலாக சுங்கச்சாவடி கட்டணம் எப்படி கொடுத்த முடியும்? என்றனர்.

SCROLL FOR NEXT