செய்திகள்

விளைச்சல் அதிகரிப்பால் வீழ்ச்சியடைந்த காய்கறி விலைகள்

தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் காய்கறி விளைச்சல் அதிகரித்துள்ளதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

கடந்த ஆண்டு பெய்த பலத்த மழை காரணமாக தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் காய்கறி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் காய்கறி வரத்து அதிகரித்துள்ளது.

அதிக வரத்து காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. பல காய்கறிகள் கிலோ 10 ரூபாய்க்கு கீழேயே விற்கப்படுகின்றன. 1 கிலோ தக்காளி 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கேரட் 1 கிலோ 9 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோஸ் கிலோ ரூ.3-க்கு விற்கப்படுகிறது.

பச்சை மிளகாய் கிலோ ரூ.9-க்கும், கத்தரிக்காய் ரூ.7-க்கும், பீட்ரூட் ரூ.4-க்கும், அவரைக்காய் ரூ.6-க்கும், பூசணிக்காய் ரூ.4-க்கும் விற்கப்படுகிறது.

சின்ன வெங்காயம் கிலோ ரூ.20-க்கும், பெரிய வெங்காயம் ரூ.22-க்கும், பீன்ஸ் ரூ.12-க்கும், இஞ்சி ரூ.25-க்கும், உருளைக்கிழங்கு ரூ.11-க்கும் விற்கப்படுகிறது.

இது தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 350 லாரிகளில் காய்கறிகள் வரும். தற்போது 450 லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. இதனால் காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காய்கறி அதிக அளவில் விளைந்துள்ளது. இதனால் சென்னை புறநகரில் வசிப்பவர்களின் காய்கறி தேவையை அவர்களே பூர்த்தி செய்து விடுகிறார்கள்.

இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை மந்தமாகி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

காய்கறி விளைச்சல் அதிகரித்திருப்பது தொடர்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட விவசாயிகள் கூறியதாவது:-

கடந்த ஆண்டு மழை நன்றாக பெய்ததால் விவசாயிகள் அனைவரும் காய்கறி சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டினார்கள். விளைச்சல் இரண்டு மடங்கானதால் கிராமப்புற சந்தையில் கத்தரிக்காய் கிலோ 50 பைசா முதல் 1 ரூபாய் வரையே விற்பனையானது. இதனால் சாகுபடி தொடங்கியது முதல் அறுவடை வரையிலான செலவு, போக்குவரத்து செலவு கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த நாங்கள் பறித்த காய்கறிகளை ஆற்றங்கரையோரம் மாடுகளுக்கு கொட்டி விட்டோம்.

மேலும் 1 கிலோ தக்காளியை ரூ.1.42-க்கு வியாபாரிகளிடம் கொடுக்கிறோம். இந்த விலை சரிவால் அறுவடை கூலியை கூட கொடுக்க முடியவில்லை. எனவே காய்கறிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகிறோம்.

காய்கறி விலை வீழ்ச்சியால் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #tamilnews