செய்திகள்

கோத்தகிரியில் நாளை 10-வது காய்கறி கண்காட்சி தொடக்கம்

கோடை விழாவையொட்டி இந்த ஆண்டிற்கான 10-வது காய்கறி கண்காட்சி கோத்தரியில் உள்ள நேரு பூங்காவில் நாளை தொடங்குகிறது.

மாலை மலர்

கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ளது நேரு பூங்கா. 65 சென்ட் பரப்பில் உள்ள இந்த பூங்காவில் ரோஜா தோட்டம், பல ரக மலர்ச்செடிகள், சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவைகள் உள்ளன. இந்த பூங்கா வளாகத்தில் கோத்தர் இன மக்களின் பழமையான அய்யனோர் அம்மனோர் கோவில் உள்ளது. ஆண்டு முழுவதுமே இங்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 10-வது காய்கறி கண்காட்சி கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் நாளை 5-ந்தேதி மற்றும் 6-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடத்த நீலகிரி தோட்டக்கலை துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை தொடங்கும் காய்கறி கண்காட்சி மற்றும் கோடை விழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைக்கிறார். மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகிக்கிறார். காய்கறி கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலை துறை மற்றும் காய்கறி உற்பத்தி தொடர்பான விளக்க அரங்கங்கள் அமைக்கப்படுகிறது.

இந்த கண்காட்சியில் காய்கறி மற்றும் பழங்களை கொண்டு மெகா நந்தி அமைக்கப்படவுள்ளது. இது தவிர காய்கறிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. முதன் முறையாக காய்கறிகள் விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

இந்த காய்கறி கண்காட்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பயிர் செய்த காய்கறிகள் குறித்த தனி அரங்கு அமைத்து போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு பரிசும் சுழற்கோப்பையும் வழங்கப்படவுள்ளது.#vegetablefair