நெல்லை:
வீரவநல்லூரை அடுத்த அரிகேசவநல்லூரை சேர்ந்தவர் முத்துக் குமார் (வயது40), கூலித்தொழிலாளி. இவரது மனைவி கோமதி(32). இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர்களது பெண் குழந்தை இறந்துவிட்டது. அந்த சோகம் முடிவதற்குள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவர்களது ஆண் குழந்தையும் திடீரென இறந்துவிட்டது. இதனால் கணவன்-மனைவி இருவரும் மிகுந்த சோகத்திற்குள்ளாயினர். இதில் முத்துக்குமார் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.
குழந்தைகள் இருவரும் இறந்துவிட்டார்கள் என்ற சோகத்தில் இருந்த முத்துக்குமார் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று வீட்டில் அவரது மனைவி இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் வீட்டிற்கு வந்த கோமதி தனது கணவன் தூக்கில் பிணமாக தொங்கு வதை பார்த்து அலறி துடித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வீரவநல்லூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து முத்துக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.