பெங்களூரு:
சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளியாக இருந்தவர் சைமன். கடந்த 1993-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ந் தேதி வீரப்பனை பிடிக்க ஐ.பி.எஸ். அதிகாரியும், சிறப்பு அதிரடிப்படை தலைவருமான கோபாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் 2 வாகனங்களில் தமிழ்நாடு மேட்டூர் அருகே உள்ள கோவிந்தபாடி கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.
பாலாறு அருகே சுரகாமடுவு பகுதியில் வாகனங்கள் சென்றபோது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் வெடித்தன. இதில், சிறப்பு அதிரடிப்படையில் இருந்த தமிழக மற்றும் கர்நாடக போலீஸ் அதிகாரிகள், போலீஸ்காரர்கள், வனத்துறையினர் என்று மொத்தம் 22 பேர் இறந்தனர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய சைமன் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டு மைசூரு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த மைசூரு ‘தடா’ கோர்ட்டு சைமன் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். சைமன் உள்பட 4 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தனர்.
இதன் மீது விசாரணை நடத்திய நீதிபதி, சைமன் உள்பட 4 பேருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி அவர்கள் ஜனாதிபதிக்கு மனுக்கள் அனுப்பினர். ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி ஆகியோர் நடவடிக்கை எடுக்கவில்லை.
சிறையில் இருந்த சைமன் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். சிறுநீரக கோளாறும் அவருக்கு இருந்தது. இதனால் மைசூரு மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர், அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேல் சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் சைமன் இறந்தார். அவருக்கு வயது 60.