வடவள்ளி:
கோவை வேடப்பட்டி - பேரூர் சாலையில் தனியார் பஞ்சு மெத்தை தயாரிக்கும் குடோன் உள்ளது. இதனை சுப்பிரமணியம் என்பவர் கடந்த 25 வருடங்களாக நடத்தி வருகிறார்.
குடோனை ஒட்டி அவரது வீடு உள்ளது. இந்த குடோனில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் அங்கு தங்கி உள்ளனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் பஞ்சு மெத்தை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் வைத்திருந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அந்த சமயத்தில் குடோன் உரிமையாளர் சுப்பிரமணியம் வெளியே வந்தார். அவர் குடோன் தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அங்கு தங்கி உள்ள ஊழியர்களை எழுப்பினார். அவர்கள் உடனடியாக எழுந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அக்கம் பக்கத்தினரும் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் தீ மளமளவென்று பரவ தொடங்கியது. இந்த வளாகத்தில் மொத்தம் 3 குடோன்கள் உள்ளது. இந்த குடோன்களிலும் தீப்பற்றியது.
இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மண்டல அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் கோவை, கவுண்டம்பாளையம், பீளமேடு பகுதிகளில் இருந்து 3 வண்டிகளில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனாலும் குடோன்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இந்த குடோனில் இருந்து 3 லாரிகளில் பஞ்சு மெத்தை ஏற்றி இன்று டெலிவரிக்கு அனுப்புவதற்காக குடோன் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த லாரிகளும் அதில் ஏற்றி வைக்கப்பட்டு இருந்த மெத்தைகளும் தீயில் எரிந்து சேதமானது. ரூ. 3 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவல் கிடைத்ததும் தாசில்தார் ராதாகிருஷ்ணன், வருவாய் அலுவலர் இளவரசு, கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் ஆகியோர் குடோனுக்கு வந்து சேதம் அடைந்த பொருட்களை பார்வையிட்டனர்.
குடோனுக்கு மர்ம நபர்கள் யாராவது தீ வைத்தார்களா? அல்லது மின் கசிவு காரணமாக தீப்பிடித்ததா? என்பது குறித்து வடவள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.