செய்திகள்

சுற்றுலா பயணிகள் காண்பதற்கு திறப்பு: வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு 20 வகையான பறவைகள் வருகை

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக நேற்று திறக்கப்பட்டது. 20 வகையான பறவைகள் அங்கு வந்துள்ளன.

சென்னை:

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக நேற்று திறக்கப்பட்டது. 20 வகையான பறவைகள் அங்கு வந்துள்ளன.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சென்னையில் இருந்து 82 கிலோ மீட்டர் தொலைவில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை தொடங்கும் அக்டோபர் மாதம் முதல் வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கும்.

சைபீரியா, ஆஸ்திரேலியா, சீனா, பர்மா, இலங்கை, சுவீடன், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 26 வகையான பறவைகள் இங்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு இதுவரை நத்தைகொத்தி நாரை, வெள்ளை அரிவால் மூக்கன், பாம்புத்தாரா, ஊசிவால் வாத்து, கூழைக்கடா உள்ளிட்ட 20 வகையான பறவைகள் வந்துள்ளன.

தற்போதைய நிலையில், 5,700 பறவைகள் அங்கு தங்கியுள்ளன. மேலும், பல இடங்களில் இருந்து பறவைகள் வந்துகொண்டிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து, நேற்று காலை 6.30 மணிக்கு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக திறக்கப்பட்டது. வனச்சரகர் சுப்பையா சரணாலயத்தை திறந்துவைத்தார். ஏற்கனவே, சரணாலயம் திறக்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்ததால், நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகள் அங்கு வரத்தொடங்கினார்கள். பெரியவர்களுக்கு ரூ.5, சிறியவர்களுக்கு ரூ.2, வீடியோ கேமராவுக்கு ரூ.150, செல்போன் கேமராவுக்கு ரூ.25 என்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேடந்தாங்கல் ஏரிப் பகுதியில் நல்ல மழை பெய்ததால், மரங்கள் அனைத்தும் பச்சைபசேல் என்று காட்சியளிக்கின்றன. ஏரியிலும் 15 அடி அளவுக்கு நீர் இருப்பு உள்ளதால், இங்கு வந்துள்ள பறவைகள் சுறுசுறுப்பாக அங்கும், இங்கும் பறந்து கொண்டிருந்தன.

அடுத்த மாத (நவம்பர்) இறுதிக்குள் மேலும் சுமார் 20 ஆயிரம் பறவைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு வரும் பறவைகள் ஏரியில் உள்ள நீர்க்கடப்பை மரங்களில் கூடுகள் கட்டி தங்கி, முட்டையிட்டு குஞ்சு பொரித்து, குஞ்சு வளர்ந்ததும் சொந்த நாடுகளுக்கு திரும்பும்.

தற்போது, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு சுற்றுலா பயணிகளின் வருகை ஓரளவே உள்ளது என்றாலும், விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பறவைகள் பற்றி விவரிக்க ‘கைடு’ யாரும் நியமிக்கப்படவில்லை.

பறவைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தாலும் அந்த பறவை பற்றிய விவரங்கள் தெரிவதில்லை. எனவே, பறவை இனங்கள் பற்றி நன்கு தெரிந்த ‘கைடு’களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.