கிணற்றில் இருந்து தாய்-மகள் பிணங்கள் மீட்கப்படும் காட்சி. 
செய்திகள்

வாழப்பாடி அருகே குழந்தையை கொன்று தாய் தற்கொலை

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடும்ப தகராறு காரணமாக 2 வயது குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலை குமார் (வயது 35). இவர் வாழப்பாடி அருகே உள்ள தனியார் நூல்மில்லில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கும், இளம்பெண் கவுசல்யா (25) என்பவருக்கும் கடந்த 3½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் நடுப்பட்டி கிராமத்திலேயே தனி குடித்தனம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தில் தினம் தினம் சண்டை ஏற்பட்டதால் ஒரு கட்டத்தில் மனம் உடைந்த கவுசல்யா இனிமேல் கணவருடன் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்தார்.

தான் தற்கொலை செய்து கொண்டால் தனது 2 வயது பெண் குழந்தை பூஜா அனாதையாகி விடுமே, யாரும் வளர்க்க மாட்டார்களே என மன வருந்தியாக தெரிகிறது.

இதனால் கவுசல்யா நேற்று இரவு குழந்தை பூஜாவை அழைத்து கொண்டு நேராக அதே பகுதியில் உள்ள வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்திற்கு அழுதபடி சென்றார். பின்னர் அங்கு கவுசல்யா தனது குழந்தை பூஜாவை நெஞ்சோடு சேர்த்து இறுக்கமாக அனைத்துக்கொண்டு மனதை கல்லாக்கி கொண்டு விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்தார். இதில் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

பிணமாக கிடக்கும் தாய்-மகள்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews