ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம்கார்த்திகேயன் 
செய்திகள்

மாணவர்களுக்கு இ-பாஸ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க வசந்தம் கார்த்திகேயன் கோரிக்கை

பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கைக்காக செல்லும் மாணவர்களுக்கு இ-பாஸ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம்கார்த்திகேயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருக்கோவிலூர்:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்கள் அல்லது வெளிமாவட்டத்திற்கு வாகனங்களில் செல்வதற்கு கண்டிப்பாக இ-பாஸ் பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் துக்க நிகழ்ச்சிக்காக வெளிமாவட்டத்துக்கு செல்பவர்களுக்கு இ-பாஸ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு இ-பாஸ் விண்ணப்பிக்கும்போது பெரும்பாலான நேரங்களில் அனுமதி கிடைப்பது இல்லை. இதனால் பொது மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனிடையே தற்போது பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று பார்த்து சேர்க்கை செய்யவே விரும்புகிறார்கள்.

ஆனால் தற்போது உள்ள இ-பாஸ் நடைமுறையால் அவர்கள் பெரும் சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே முதல் கட்டமாக பள்ளி, கல்லூரி சேர்க்கைக்காக செல்பவர்களுக்கு இ-பாஸ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதற்கு பதில் அவர்கள் பள்ளி, கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடர்பான ஆவணங்களை எடுத்து வரும் பட்சத்தில் அவர்களுக்கு அனுமதி வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அனைத்தும் ஆன்லைனில் நடைபெறுவதால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. எனவே பள்ளி, கல்லூரிமாணவர் சேர்க்கைக்காக செல்லும் மாணவர்களின் வாகனங்களுக்கு இ-பாஸ் பெறுவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT