நாகர்கோவில்:
வசந்தகுமார் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா தடை காலத்தில் வெளியே வந்ததின் காரணமாக பொதுமக்களிடம் இருந்து இருசக்கர வாகனங்களை தமிழக அரசு காவல் துறையால் பிடித்து காவல் நிலையம் மற்றும் விளையாட்டு திடல்களில் நிறுத்தி வைத்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பயன் படுத்திய வாகனங்கள் ஒரே இடத்தில் பிடித்து நிறுத்தி வைத்திருப்பதால் நோய் தொற்று பரவுவதற்கு காரணமாகி விடும். எனவே தமிழக முதல்வர் போலீசாரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்வாரிய கட்டணம் செலுத்த வேண்டும் என்று அதற்கான விபரம் அனுப்பி உள்ளனர். தமிழக அரசு மின் கட்டணத்தையும் தள்ளுபடி செய்தால் இந்த கால கட்டத்தில் சாதாரண மக்கள் மிகவும் பயன் பெறுவார்கள். முக கவசம் இல்லாமல் வருவோர்களுக்கு ரூ.500 அபராதம் விதிப்போம் என்று கூறுகின்றனர். அதற்கு முன்பு அனைவருக்கும் முக கவசங்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும் அல்லது தனியாரும் மக்களுக்கு வழங்கலாம் என்று அனுமதிக்க வேண்டும்.
தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் நகை கடன் வழங்கப்பட வேண்டும். பொதுத்துறை வங்கி, கூட்டுறவு வங்கிகளிலும், நகை கடன் வழங்க அனுமதி வழங்க வேண்டும். விவசாயிகள், அன்றாடம் வேலை செய்து வாழ்கின்றவர்களுக்கு அவசரமாக உதவுவது இந்த நகை கடன்தான். எனவே தமிழக முதல்வர் இந்த நகை கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.