வசந்தகுமார் எம்.பி. 
செய்திகள்

தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்த வசந்தகுமார் எம்.பி.

சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த வசந்தகுமார் எம்பி, தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து, மற்றவர்களுக்கு முன்னுதாரமாக திகழ்ந்துள்ளார்.

மாலை மலர்

ஆரல்வாய்மொழி:

வசந்தகுமார் எம்.பி. சென்னையில் இருந்து தன் மனைவியுடன் குமரி மாவட்டத்துக்கு வந்தார். அப்போது ஆரல்வாய்மொழி  சோதனைச்சாவடியில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்தவர்களை தடுத்து நிறுத்தி கொரோனா பரிசோதனை செய்து அனுப்பி வைத்தனர்.

இதைக்கண்ட வசந்தகுமார் எம்.பி. தனது டிரைவரிடம் காரை ஓரமாக நிறுத்தச் சொன்னார். காரில் இருந்து இறங்கிய அவர், மனைவியை அழைத்துக்கொண்டு சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் சென்று தனக்கும், தன்னுடைய மனைவிக்கும் கொரோனா பரிசோதனை செய்யும்படி கூறினார். சுகாதாரத்துறையினரும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.

அதன்டிபிறகு வசந்தகுமார் எம்.பி. அங்கிருந்து அகஸ்தீஸ்வரம் புறப்பட்டுச் சென்றார். அவரது இந்த செயலை அங்கிருந்தவர்கள் பாராட்டினர். 

வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவோர் கண்டிப்பாக தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து மருத்துவத் துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.