வாணியம்பாடி:
வாணியம்பாடி நேதாஜிநகர் பகுதியில் சாராயம், போலி மதுபானத்தை 100-க்கும் மேற்பட்ட ஆட்களை கொண்டு விற்பனை செய்து வந்தவர் மகேஷ்வரி (வயது 37),
சாராய வியாபாரி. இவர் மீது குண்டர் சட்டம் உள்பட பல்வேறு வழக்குகள் போடப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டு இருந்தார். பின்னர் வெளியே வந்து கஞ்சா விற்பனை
செய்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவுபடி வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு
பாலகிருஷ்ணன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கவிதா மற்றும் போலீசார் நேதாஜிநகர் பகுதியில் உள்ள அவருடைய வீட்டுக்குச் சென்றனர்.
அங்கிருந்த சீனிவாசனின் மனைவி மகேஷ்வரி (37), ஆறுமுகத்தின் மனைவி உஷா (30), சின்னராஜின் மனைவி காவ்யா (19) ஆகிய 3பேரை கைது செய்தனர். அவர்கள்
கொடுத்த தகவலின்பேரில் மகேஷ்வரியின் மகன்கள் தேவந்திரன் (19) மற்றும் 15 வயது மகனும், 17 வயது மகளும், ஆறுமுகத்தின் 15 வயது மகனை போலீசார் கைது
செய்தனர். அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா, ரூ.20 லட்சத்து 32 ஆயிரத்து 752 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா வழக்கில் கைதான மகேஷ்வரி, உஷா, காவ்யா மற்றும் தேவந்திரன் ஆகிய 4 பேர் வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 18 வயதுக்குள்ளான 3 சிறுவர்கள் வேலூர் சிறுவர் சீர்சிருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள சீனிவாசன் மற்றும் சின்னராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.