செய்திகள்

வந்தவாசி அருகே கார் மோதி புதுமாப்பிள்ளை பலி

வந்தவாசி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் திருமணமாகி 6 மாதமே ஆன புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த ஆரியாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் பழனி (வயது 28). விவசாயியான இவர் தனது டிராக்டருக்கு டீசல் வாங்கி வர நேற்று இரவு வந்தவாசி சென்றார்.

டீசல் வாங்கிக்கொண்டு வந்தவாசியில் இருந்து ஆரியாத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். விளாங்காடு நெடுஞ்சாலை சளுக்கை கூட்டு ரோடு அருகே வந்த போது வந்தவாசி நோக்கி வந்த கார் பழனி ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது.

இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்தவெள்ளத்தில் பழனி பலியானார். பழனிக்கும் மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த அமுதவல்லி என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது.

வந்தவாசி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 6 மாதம் ஆன நிலையில் புது மாப்பிள்ளை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.