செய்திகள்

வழுதாவூர் சாலையில் பட்டப்பகலில் நடந்த ரவுடி கொலையில் 10 பேர் கைது

வழுதாவூர் சாலையில் பட்டப்பகலில் நடந்த ரவுடி கொலையில் 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை திலாஸ்பேட்டை கருணா ஜோதி நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் ஜாக்சி என்ற சரவணன். (வயது 19). ரவுடியான இவர் மீது வழிப்பறி மற்றும் ஆயுதம் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சரவணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். தினமும் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் அவர் கையெழுத்திட்டு வந்தார்.

நேற்று காலை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர் சரவணன் தனது நண்பர்கள் 2 பேருடன் வழுதாவூர் சாலையில் உள்ள ஒரு மதுக்கடையில் மது குடித்தார்.

பின்னர் மதியம் 2.45 மணியளவில் காந்தி நகர் வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே உள்ள ஒரு பீசா கடையில் 3 பேரும் தந்தூரி சிக்கன் வாங்கி சாப்பிட்டனர்.

அப்போது சிகரெட் பிடிப்பதற்காக பீசா கடையில் இருந்து சரவணன் வெளியே வந்தார். சிகரெட் பிடித்து கொண்டே சரவணன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட கும்பல் சரவணனை சுற்றி வளைத்தது. தன்னை கொல்ல வந்ததை அறிந்த சரவணன் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓடினார். ஆனால், அந்த கும்பல் ஓட, ஓட விரட்டி அரிவாளால் சரமாரி வெட்டி கொன்றது.

பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் அறிந்ததும், கோரி மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர்கள் கலையரசன், வடிவழகன், மற்றும் அதிரடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரக்சனாசிங்கும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சரவணனை கொலை செய்த கும்பல் குறித்து அங்குள்ள செல்போன் கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் துப்பு துலக்கினர்.

அப்போது கொலையாளிகள் காமராஜ் நகர் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த ஹானஸ்ட்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொலையாளிகள் ஆலங்குப்பம் ஏரிக்கரையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலை கும்பலை சேர்ந்த 10 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 4 வீச்சரிவாள்கள், 4 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சரவணனை கொன்றது ஏன் என்பது குறித்து ஹானஸ்ட்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை ஹானஸ்ட்ராஜ் தெரிவித்தார். அவர் போலீசாரிடம் கூறியிருப்பதாவது:-

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு 9-ம் வகுப்பு படித்து வந்த ஹானஸ்ட்ராஜியின் தங்கை அஜிதாவை (14) சரவணன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சரவணன் பல முறை அஜிதாவை சந்தித்து காதலிக்க வலியுறுத்தி உள்ளார்.

ஆனால், அஜிதா காதலிக்க மறுத்து வந்தார். தொடர்ந்து சரவணன் தொல்லை கொடுக்கவே அஜிதா தற்கொலை செய்து கொண்டார். இதனால் சரவணன் மீது ஹானஸ்ட்ராஜ் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹானஸ்ட்ராஜை சந்தித்து அவரது தங்கை அஜிதாவின் போட்டோவை சரவணன் கேட்டுள்ளார். இது ஹானஸ்ட் ராஜுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதனால் சரவணனை தீர்த்துக்கட்ட ஹானஸ்ட் ராஜ் திட்டமிட்டார். தனது கூட்டாளிகளிடம் இதனை தெரிவித்தார். இதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். சரவணனை கொலை செய்ய திட்டமிட்டு கடந்த சில நாட்களாக சரவணன் நடமாட்டத்தை பின்தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

நேற்று முன்தினம் கோரிமேட்டில் சரவணனை கொலை செய்ய முயன்ற போது அவர் ஒரு திருமண மண்டபத்துக்குள் புகுந்து தப்பி விட்டார். பின்னர் நேற்று மதியம் வழுதாவூர் சாலையில் மது குடித்து கொண்டு இருந்த சரவணனை கொல்ல திட்டமிட்டனர்.

ஆனால், அங்கு சந்தர்ப்பம் இல்லாததால் அந்த இடத்தில் இருந்து சரவணன் தப்பி விட்டார். அதனைத் தொடர்ந்துதான் பீசா கடைக்கு வந்த சரவணனை ஹானஸ்ட் ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் வெட்டி கொன்றுள்ளனர்.

மேற்கண்ட தகவலை ஹானஸ்ட் ராஜ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலையில் மேலும் ஜோஸ்வா, சாந்தகுமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஹானஸ்ட்ராஜ் மீது ஆரோவில் போலீஸ் நிலையத்தில் வழிப்பறி வழக்கு மற்றும் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் ஆயுதங்களுடன் திரிந்த வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews