செய்திகள்

கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் வெளியேற வேண்டும்: வைகோ

மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் வெளியேற வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மாலை மலர்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நேரு நாட்டின் சுதந்திரத்தை நள்ளிரவில் அறிவித்தது போல தற்போது மோடி ஜி.எஸ்.டி. வரி விதிப்பை நள்ளிரவில் அறிவித்துள்ளார். இதற்காக 18 முறை கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டதாக மோடி கூறியுள்ளார். ஆனாலும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அவசர கோலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதை பல பொருளாதார மேதைகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனால் சில பொருட்கள் விலை உயரும் என்று மோடியே ஒப்புக்கொண்டுள்ளார். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு மாநில உரிமைகளை பாதிக்கும். பட்டாசு, தீப்பெட்டி தொழில்கள் கடுமையாக பாதிப்பை சந்திக்கும். ஜி.எஸ்.டி. வரியுடன் கேளிக்கை வரி 30 சதவீதம் சேர்வதால் தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர்.

இதே போல் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். சிறு தொழில்கள் பாதிக்கப்படும். கதிராமங்கலத்தில் மீத்தேன் எரிவாயு ஆயில் எடுக்க 2011-ம் ஆண்டில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். இதுவரை எரிவாயு எடுத்தது போதும், உடனடியாக கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் திட்டத்தை கைவிட்டு வெளியேற வேண்டும். தமிழக அரசு ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக குரல் கொடுத்து மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.


இந்த விசயத்தில் மத்திய அரசு தமிழக மக்களை பாழாக்க முயற்சி செய்கிறது. ஜல்லிக்கட்டு பிரச்சனைக்காக இளைஞர்கள் போராடியது போல இதற்கும் போராட வேண்டும். கதிராமங்கலம் கிராமத்தினர் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டனத்துக்குரியது. வருகிற 9-ந்தேதிக்குள் போலீசார் கதிராமங்கலத்தில் இருந்து வெளியேற வேண்டும். கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் 10-ந்தேதி எனது தலைமையில் அங்கு போராட்டம் நடத்தப்படும். ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்து கூற விரும்பவில்லை.