செய்திகள்

மீம்ஸ் போடுவதால் எனது குடும்பத்தினர் பாதிப்பு- வைகோ கண்ணீர் பேட்டி

மீம்ஸ்களால் தனது குடும்பத்தினர் மன ரீதியாக நொறுங்கிப்போய் உள்ளதாகவும், எனவே மீம்ஸ் போடுவதை நிறுத்திக் கொள்ளுமாறு வைகோ கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

மாலை மலர்

மதுரை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் உறவினர் சரவணா சுரேஷ் மத்திய அரசை கண்டித்து தீக்குளித்தார். ஆபத்தான நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவரை இன்று பிற்பகலில் வைகோ பார்த்து ஆறுதல் கூறினார்.

மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த வைகோ, நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையில் இருந்தவன் சரவணா சுரேஷ். அவரது உயிர் தற்போது ஊசலாடிக் கொண்டிருக்கிறது. எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவன்.

ஸ்டெர்லைட், நியூட்ரினோ பிரச்சனையில் உறுதியோடு போராடி வந்த என்னை சிலர் அவதூறாக பேசி வருவதாக என்னிடம் கூறி வருந்தினான்.

அப்போது இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாதே என்று கூறி சமாதானம் செய்து வைத்தேன்.

விருதுநகர் சட்டமன்ற தேர்தலின் அடிப்படை செலவுகளை கவனித்துக் கொண்டவன் சரவணா சுரேஷ். குடும்பத்தில் எனக்கு அரசியல் ரீதியாக உதவியவர் அவர்.

கடந்த சில நாட்களாக சோகமாக இருந்த அவன் இன்று காலை நடைபயிற்சிக்கு செல்வதாக கூறி வெளியே சென்று தீக்குளித்தார். அவர் பிழைக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.

ஈழத்தமிழர் பிரச்சனையில் தீக்குளித்த முத்துக்குமாரின் உடல் கருகியதுபோல சரவணா சுரேஷின் உடல் உள்ளது. அவரது மனைவிக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை?

என்னைப்பற்றி மீம்ஸ் போடுபவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் போடும் மீம்ஸ்களால் எங்கள் குடும்பத்தினர் மன ரீதியாக நொறுங்கிப்போய் உள்ளனர். எனவே மீம்ஸ் போடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

ஸ்டெர்லைட் நிறுவனத்தில் எனது மகனுக்கு பங்கு உள்ளது என தகவல் பரப்பி வருவது கவலையாக உள்ளது. காலில் விழுந்து மன்றாடிக் கொள்கிறேன். இனி யாரும் தீக்குளிக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.