குமரி மாவட்ட புயல் பாதிப்புகளை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று பார்வையிட்டார். சுசீந்திரம் இந்திரா காலனியில் மழை வெள்ளம் புகுந்ததை பார்வையிட்ட அவர் மணக்குடி கடற்கரை கிராமத்துக்கு சென்றார்.
அங்கு புயலால் சேதம் அடைந்த மீனவர்களின் படகுகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி கடல் பகுதியில் வீசிய புயல் காற்று குமரி மாவட்டத்தையே தலைகீழாக புரட்டி போட்டு விட்டது. புயல் பற்றிய எச்சரிக்கை அறிவிப்பை 20-ந் தேதியே கொடுத்து விட்டதாக கூறுகிறார்கள்.
ஆனால் மீனவர்களுக்கு இது சரியாக தெரிவிக்கப்படவில்லை. அதனால் கடலுக்கு சென்ற மீனவர்கள் பேரிழப்பை சந்தித்துள்ளனர். மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்க வேண்டியது அரசின் கடமை. அதனை செய்ய இந்த அரசு தவறி விட்டது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகி உள்ளனர்.
அவர்கள் கடலில் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். மராட்டிய மாநிலம் வேகர் துறைமுகத்தில் 98 படகுகளும், குஜராத்தில் 60 படகுகளும் கரை ஒதுங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கடற்கரை கிராமங்களில் அழுகுரல் கேட்கிறது. அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
தமிழக அரசு புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும். அவர்களின் படகுகளை சீரமைக்கவும் உரிய நிதி அளிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் ஜி.பி.எஸ். கருவி வழங்குவோம் என்று கூறி இருந்தனர். அதனை வழங்க தமிழக அரசு தவறி விட்டது. அதனை வழங்கியிருந்தால் மீனவர்களை கண்டுபிடித்து இருக்கலாம். குமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் தளம் இல்லாதது மிகப்பெரிய பாதிப்பு. குமரி மாவட்டத்தில் ஏராளமான விளை நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. இவற்றை அரசு உரிய முறையில் கணக்கெடுத்து நிவாரண பணிகளை முடுக்கி விட வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டிருந்தாலும் குமரி மாவட்டத்துக்கு வந்து இங்கு ஏற்பட்டுள்ள சேதத்தை ஆய்வு செய்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.