செய்திகள்

தமிழகத்தை குறி வைத்து அழிக்கும் நோக்கில் மோடி செயல்படுகிறார் - வைகோ

தமிழகத்தை குறி வைத்து அழிக்கும் நோக்கில் மோடி செயல்படுகிறார் என்று வைகோ ஆவேசமாக பேசினார். #Neutrinoplan

மாலை மலர்

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள பொட்டிபுரத்தில் அம்பரப்பர் மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க முயற்சி எடுக்கும் மத்திய அரசை கண்டித்தும், இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் வைகோ கடந்த 31-ந் தேதி மதுரையில் நடைபயணத்தை தொடங்கினார்.

9-ம் நாளான நேற்று அணைப்பட்டி, காமய கவுண்டன்பட்டி, நாராயண தேவன்பட்டி, சுருளிபட்டி, கருநாக்கமுத்தன்பட்டி ஆகிய கிராமங்களில் கொழுத்தும் வெயிலில் நடந்து சென்றார். வழி நெடுகிலும் கிராம மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வயல்களில் வேலை செய்த விவசாயிகள் வைகோவுக்கு இளநீர் மற்றும் திராட்சை பழங்களை கொடுத்து வரவேற்றனர். அப்போது அவர்களிடையே வைகோ பேசியதாவது:-

கம்பம் பள்ளத்தாக்கு இருபோக நெல் விவசாயம் நடைபெறும் பகுதியாகும். 14707 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக போதிய மழை இல்லாததால் ஒரு போகம் மட்டுமே நடந்து வருகிறது.

நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால் அவர்கள் முல்லைப்பெரியாறு அணை தண்ணீரை எடுத்துக்கொள்வார்கள். இதனால் ஒருபோக விவசாயமும் நடைபெறாத நிலை ஏற்படும். ஆராய்ச்சிக்காக விவசாயத்தை இழக்க நாம் தயாராக இருக்க கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இரவு கூடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நான் நடந்து வந்தபோது எங்கு பார்த்தாலும் பச்சைபசேல் என்று வாழை தோட்டங்கள், தென்னந்தோப்புகள், திராட்சை தோட்டங்கள் காட்சி அளித்தது. இயற்கையோடு இணைந்த இதுபோன்ற ஒரு வாழ்க்கை நகரங்களில் கிடைக்காது. ஆனால் இந்த இயற்கையை அழித்து விட்டு அணு ஆராய்ச்சிக்காக மலையை குடைந்து விவசாயத்தை அழிக்க மத்திய அரசு துடித்து வருகிறது.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தினசரி 12 லட்சம் லிட்டர் தண்ணீர் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து எடுக்கப்படும். இதனால் விளை நிலங்கள் காய்ந்து போகும்.

இத்திட்டத்தை செயல்படுத்த விடாமல் நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தடை உத்தரவு பெற்றுள்ளேன். ஆனால் இதனை விரைந்து செயல்படுத்த மோடி தீவிரம் காட்டி வருகிறார்.

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோரை நான் கேட்டுக் கொள்வது என்ன வென்னால் இத்திட்டத்திற்கு அனுமதி கொடுத்து விடாதீர்கள். அவ்வாறு கொடுத்தால் நீதிமன்றத்தில் ஜெயிக்க முடியாது. உச்சநீதிமன்றத்தில் காவிரி பிரச்சினையில் நமக்கு கிடைத்த அநீதிதான் கிடைக்கும். எனக்கு நீதிமன்றங்களில் நம்பிக்கை இல்லை. பிரதமர் மோடி தமிழகத்தை குறிவைத்து அழிக்கும் நோக்கில் செயல்படுகிறார்.

இனிவரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறவே முடியாது. மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.

தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் மோடிக்கு அவர் தமிழகம் வரும்போது கருப்பு கொடி காட்ட வேண்டும். அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி கட்ட வேண்டும். அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலைக்கு செல்ல வேண்டும். அன்று தமிழகத்தில் திரும்பிய திசையெல்லாம் கருப்பு நிறமாக காட்சி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #Neutrinoplan