தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரத்தில் அம்பரப்பர் மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 31-ந் தேதி மதுரையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நடைபயணம் தொடங்கினார்.
பல்வேறு கிராமங்களில் தனது தொண்டர்களுடன் சென்று நியூட்ரினோ அமைவதால் ஏற்படும் ஆபத்து குறித்து பிரசாரம் செய்து வருகிறார். 8-வது நாளான நேற்று சிந்தலைச்சேரியில் நடைபயணத்தை தொடங்கி மார்க்கையன்கோட்டை, எல்லப்பட்டி, அம்மாபட்டி, குரும்பபட்டி புதூர். உத்தம பாளையம், கோகிலாபுரம், ஆனைமலையான்பட்டி வழியாக ராயப்பன்பட்டியை அடைந்தார். இரவு அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
நாங்கள் ஆராய்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. அதற்காக ஆராய்ச்சியால் அழிவைத் தேடிக் கொள்ள மாட்டோம். நியூட்ரினோ மையம் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தொடர்பாக பிரதமர் மோடியை நான் சந்திக்க மாட்டேன். ஏனெனில் எனது தினசரி போராட்டங்கள், நடைபயணம் குறித்த செய்தி உளவுத் துறை மூலமாக அனுப்பி வருகின்றனர்.
அதனை பார்த்து அவர் தெரிந்து கொள்ளட்டும். மாநில அரசை கைக்குள் போட்டுக் கொண்டு நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு துடிக்கிறது. இதே போல் டெல்டா மாவட்டங்களை பாதிக்கும் வகையில் மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்து அதனை பாலைவனமாக்க முயற்சி எடுத்து வருகின்றனர். இதன் மூலம் விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு குறைத்து அதனை அதானி குழுமத்திற்கு விற்பனை செய்யும் முயற்சி நடந்து வருகிறது.
தமிழகத்தை பல்வேறு திட்டங்கள் மூலம் அழிக்க நினைக்கும் மோடி இனிமேல் பிரதமராகவே முடியாது. கர்நாடகத்தில் தேர்தல் முடிந்தாலும் மேலாண்மை வாரியம் அமைக்க மோடி நடவடிக்கை எடுக்க மாட்டார். ஏனெனில் தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கில் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த துடிக்கிறார். எனவே மோடி ஆட்சியில் இருக்கும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது.
நியூட்ரினோ திட்டத்தை கடந்த 3 ஆண்டுகளாக சட்டப் போராட்டத்தின் மூலம் நிறுத்தி வைத்துள்ளேன். இந்த விஷயத்தில் தமிழகமும், கேரளாவும் இணைந்து போராட வேண்டும். ஒரு வேளை போலீசாரை வைத்து இத்திட்டத்தை தொடங்கினால் 10 ஆயிரம் இளைஞர்களை ஒன்று திரட்டி மலையின் ஒரு பகுதியில் நுழைந்து ஆராய்ச்சியை தடுப்பேன்.
நியூட்ரினோ எதிர்ப்பு கூட்டத்தின் நிறைவு நாளான நாளை (10-ந் தேதி) உலகளாவிய விஞ்ஞானிகள் குழுவின் உறுப்பினராக உள்ள விஞ்ஞானி பத்மநாபன் கலந்து கொண்டு இதன் பாதிப்புகள் குறித்து விளக்கி கூற உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.