செய்திகள்

கிறிஸ்தவ ஆலயங்களில் தாக்குதல்: ரவுடிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்- வைகோ

மதுரையில் கிறிஸ்தவ ஆலயங்களில் தாக்குதல் நடத்திய ரவுடிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வைகோ கூறினார்.

மதுரை:

மதுரை ஆனையூர், கூடல்நகர், சிக்கந்தர்சாவடி ஆகிய இடங்களில் கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று முன்தினம் ஒரு கும்பல் சென்று தாக்குதல் நடத்தியது. பிரார்த்தனை செய்த கிறிஸ்தவ மக்களை அவதூறாக பேசியதுடன் பைபிளையும் தீ வைத்து எரித்தனர்.

இது குறித்து அலங்காநல்லூர், கூடல்புதூர் போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தாக்குதல் சம்பவம் பற்றி அறிந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கிறிஸ்தவ ஆலயங்களுக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

நம் நாடு பன்முக தன்மை கொண்டது. கிறிஸ்தவ மக்கள் என்றைக்கும் வன்முறையில் ஈடுபட்டது இல்லை. அவர்கள் பிரார்த்தனை செய்த நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவ கும்பல் வன்முறையில் ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

இது குறித்து புகார் அளித்தும் போலீசார் கைது நடவடிக்கை எடுக்கவில்லை. அடையாளம் தெரியாத நபர்கள் என்று வழக்குப்பதிவு செய்கிறார்கள். இது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.

உடனடியாக போலீசார் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ரவுடிகளை கைது செய்ய வேண்டும்.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு தமிழகத்தில் வி‌ஷ விதைகளை தூவ ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதனை தமிழக அரசும், காவல்துறையும் முளையிலே கிள்ளி எறிய வேண்டும்.

எனவே கிறிஸ்தவ ஆலய தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை போலீசார் கை கட்டி வேடிக்கை பார்க்கக்கூடாது.

இவ்வாறு வைகோ கூறினார்.

பேட்டியின் போது மாவட்டச் செயலாளர் புதூர் பூமிநாதன், இளைஞரணி செயலாளர் கீரைத்துறை பாண்டியன் உடனிருந்தனர். #tamilnews

SCROLL FOR NEXT